புதுச்சேரி: அரசு பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இளைஞர்களை கொண்டு வருவதே மத்திய பாஜக அரசின் மறைமுக நோக்கமாக உள்ளது என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசின் அக்னி பாதை திட்டத்தை கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம் (காலையில் 3 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம்) 16 இடங்களில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் அருகே நடந்த காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதற்கு, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும் மூத்த துணைத் தலைவருமான தேவதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: “கடந்த காலங்களில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று முப்படைக்கும் வீரர்களை தேர்வு செய்வார்கள். தற்போது ஆண்டுக்கு 47 ஆயிரம் ராணுவ வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 6 மாத பயிற்சியும், மூன்றரை ஆண்டுகள் பணியும் வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் நாட்டில் வேலையில்லாத நிலை ஏற்படும். இத்திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
அரசு பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இளைஞர்களை கொண்டு வருவதே மத்திய பாஜக அரசின் மறைமுக நோக்கமாக உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களுக்கு தற்போது, ரங்கசாமி ரிப்பன் வெட்டிக் கொண்டிருக்கிறார்.
தேர்தலின்போது மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, ரூ. 2 ஆயிரம் கோடி மானியம், மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்ப்பது போன்ற காரணங்களுக்காக பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி வைத்தார். ஆனால், இது எதுவும் நடக்கவில்லை. ரங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார். ஆளுநர் அதிகாரம் செலுத்துகிறார். ஆளுநர் சொல்வதை ரங்கசாமி செய்கிறார்.
பாஜக 3 நியமன எம்எல்ஏக்கள், ஒரு எம்பி பதவியை எடுத்துக் கொண்டது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக தான் போட்டியிட உள்ளது. இதுபோன்ற சூழலில் ரங்கசாமி எதற்காக முதல்வராக இருக்க வேண்டும். அந்த கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டாமா?. நாற்காலியை காப்பாற்ற பாஜகவிடம் முதல்வர் அடிமையாக இருக்கிறார்.
தற்போது முதல்வர் ரங்கசாமி எதையும் செய்யவில்லை. அவர் எத்தனை நாட்கள் முதல்வராக இருப்பார் என்பதே கேள்விக் குறியாக உள்ளது. அவரை பாஜக தூக்கி எறியும் காலம் வெகு தூரம் இல்லை” என்று நாராயணசாமி பேசினார்