ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்யக்கூடாது

பெங்களூரு:

டுவிட்டர் மூலம் புகார்

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் பிரவீன்சூட். இவருக்கு டுவிட்டர் மூலமாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் வாஜபேயம் என்பவர் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், பெங்களூரு போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக நீங்கள்(அதாவது டி.ஜி.பி. பிரவீன்சூட்) இருந்த போது, நகரில் தேவையில்லாமல் வாகனங்ளை தடுத்து நிறுத்தி ஆவணங்களை பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறி இருந்தீர்கள். தற்போது நீங்கள் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக உள்ளீர்கள்.

இதற்கு முன்பு நீங்கள் பெங்களூருவில் பிறப்பித்திருந்த உத்தரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதுபற்றி உங்களது கருத்தை தெரிவிக்கும்படியும் ஸ்ரீவஸ்தவ் கூறி இருந்தார். இதற்கு நேற்று மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் டுவிட்டர் பதிவு மூலமாக பதில் அளித்துள்ளார். மேலும் பெங்களூருவில் தேவையில்லாமல் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சோதனை செய்யக்கூடாது

டி.ஜி.பி. பிரவீன் சூட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நான் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன். நான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீண்டும் அமல்படுத்துவேன். பெங்களூரு நகரில் வாகன ஓட்டிகள் ஏதேனும் போக்குவரத்து விதிமுறையை மீறாமல் இருந்தால், அவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்த கூடாது. ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தேவையில்லாமல், வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்யக்கூடாது. இந்த விதிமுறைகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொருந்தாது.

பெங்களூருவில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்யக்கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தும்படி பெங்களூரு போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து இணை கமிஷனருக்கு தெரிவித்துள்ளேன். அவர்களும் இந்த உத்தரவை உடனடியாக பெங்களூருவில் அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளனர்’, என்று கூறியுள்ளார்.

வாகன ஓட்டிகள் வரவேற்பு

மாநில போலீஸ் டி.ஜி.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் வாகனங்ளை தேவையில்லாமல் தடுத்து நிறுத்தி சோதனை செய்யக்கூடாது என்று போக்குவரத்து போலீசாருக்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் உத்தரவிட்டு இருப்பதை பெங்களூரு நகரவாசிகளும், வாகன ஓட்டிகளும் வரவேற்றுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.