இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..? ரசிகர்கள் அதிர்ச்சி

லண்டன்,

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடி வருகிறார். 2015இல் அப்போதைய இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக்கிற்கு பின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

2015 உலக கோப்பையில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணியை, அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அச்சமற்ற கிரிக்கெட் ஆடி அசாத்திய ஸ்கோர்களை அடிக்கவல்ல மற்றும் எதிரணிகளை அடித்து துவம்சம்செய்து வெற்றிகளை வசப்படுத்தக்கூடிய வலுவான அணியாக கட்டமைத்தார் இயன் மோர்கன்.

2015 உலக கோப்பை தோல்விக்கு பின்னரே, 2019 உலக கோப்பையை மனதில் கொண்டு, இடைப்பட்ட 4 ஆண்டுகளில் வலுவான அணியை கட்டமைத்தார் இயன் மோர்கன். பட்லர், பேர்ஸ்டோ, ராய் ஆகிய வீரர்களுடன் தானும் அதிரடியாக பேட்டிங் ஆடி, 400 என்ற ஸ்கோரை ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வ சாதாரணமாக்கியவர் இயன் மோர்கன்.

பெரும் எதிர்பார்ப்புடன் 2019 உலக கோப்பையில் களமிறங்கிய இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலக கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன்.

சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்கிறார். 248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும் 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதம், டி20-யில் 14 அரைசதம் அடித்துள்ளார்.

இந்நிலையில் 35 வயதே ஆகும் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்த அவர் விரும்பினார். ஆனால் அதற்கிடையே இந்த திடீர் முடிவை எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அண்மையில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து சாதனையை செய்தபோதிலும், அந்த போட்டியிலும், அதற்கடுத்த போட்டியிலும் என 2 அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டாக உடற்தகுதி மற்றும் பார்ம் இல்லாமல் தவித்துவருகிறார். இதனையடுத்து இவர் மீதான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

தான் ஒரு கேப்டனாக இருந்தாலும், அணிக்கு தன்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லை என்ற நிலையில், தான் அணியில் இருந்து பயனில்லை என்று மோர்கன் கூறியிருந்தார்.

அந்தவகையில், இனிமேல் தான் இங்கிலாந்துக்கு அணிக்கு தேவையில்லை என்று முடிவெடுத்துள்ள மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். நாளை(ஜூன்28) செவ்வாய்க்கிழமை ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ஜாஸ் பட்லர் கேப்டனாக்கப்படலாம் என்று தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது பட்லர் நல்ல பார்மில் இருக்கிறார். எனவே அவர் கேப்டனாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.