சென்னை: “இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை” கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
பெரு நிறுவனங்களான பெல், மாருதி உத்யோக் மற்றும் SAIL ஆகிய நிறுவனங்களின் முன்னாள் தலைவர் வி கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 97. இவர் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “‘திருப்புமுனை மனிதர்’ என்றும் ‘இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை’ என்றும் போற்றப்பட்ட பத்மவிபூஷன் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று (26-06-2022) மறைவுற்றார் என்றறிந்து மிகவும் வருந்தினேன்.பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), இந்திய எஃகு ஆணையம் (SAIL), மாருதி உத்யோக் எனப் பல நிறுவனங்களிலும் அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் இந்திய மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்.
பல்வேறு பிரதமர்களுடன் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய பழுத்த அனுபவத்துக்குச் சொந்தக்காரரான திரு. வி.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் மறைவு ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் மற்றும் தொழில் துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.