எஸ்.இர்ஷாத் அஹமது
தஞ்சாவூர்
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் திராவி இயக்க தலைவர்களின் படங்களை திறந்து வைத்து, திமுகவின் மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு தலா ரூ.5,000 வீதம் பொற்கிழி வழங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி, திமுகவின் மூத்த முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக, கருணாநிதியாக பார்க்கிறேன். கட்சியின் முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்களை பின்தொடர்ந்து இளைஞர்கள் அரசியல் பணியாற்றுவோம் என்றார்.
மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக இனி ரூ.10,000 வழங்க வேண்டும் என்றும் திமுக அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
“இந்த பொற்கிழி வழங்குவது உங்களை கௌரவப்படுத்தவற்காக அல்ல. கழகத்தை கௌரவிப்படுத்துவதற்காக. நீங்கள் இல்லாமல் கழகம் கிடையாது. கழகம் மூன்று தேர்தல்களில் – சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில்- வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு முழுக் காரணம் உங்களைப் போன்ற கழக மூத்த முன்னோடிகள் தான். எனவே மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக இனி ரூ.10,000 வழங்க வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்,” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் தஞ்சை மாநகராட்சிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சியில் பணிபுரிந்து காலமான 6 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.54 லட்சம் பணிக்கொடையாக வழங்கினார். அதன்பின், மாநகராட்சி சார்பில் சாலையை தூய்மை செய்யும் ரூ.66 லட்சம் மதிப்பிலான வாகனத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil