வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
விமானம் மெதுவாக கிளம்பி சீரான வேகத்துடன் ரன்வேயில் ஓடி மேலே ஏறிப் பறக்கத் தொடங்கியது.
வீட்டிலிருந்து கிளம்பி ஏர்போர்ட் வந்து மகளிடமும் மருமகனிடமும் கைகுலுக்கி அழுகையுடன் விடை பெற்றுக் கொண்டு குட்டிப்பையனை ஆசைதீர முத்தமிட்டு கொஞ்சி விட்டு ஃப்ளைட் ஏறியதிலிருந்து மூட் அவுட் ஆகி அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தார் கோபாலன்.
‘யார் உனக்கு வெண்ணிலா என்று பெயர் வைத்தார்கள்? மாதத்தில் சில நாட்கள் தான் பளிச்சென்று இருக்கிறாய் .பல நாட்கள் வருவதே லேட்டாகத்தான் ! இல்லையென்றால் மேகத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறாய்..’
கோபாலன் கிண்டலுடன் பேசியதைக் கேட்டு முறைத்தாள் அவள். ‘ஜோக் அடிக்கிறீர்களா? நானே ஒன்றரை வயது குழந்தையை விட்டு விட்டு வந்திருக்கிறோமே என்ற கவலையில் இருக்கிறேன்.’
‘உன் குழந்தைக்கு இருபத்து ஏழு வயதுக்கு மேல் ஆகி விட்டதே !’ வியப்பைக் காட்டினார் அவர்.
அவள் எரிச்சலைக் காட்டினாள் .
‘பேரப் பையன் கூட இருக்க முடியலையேனு நான் மனசு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.’
‘அதான் ஆறு மாசம் அவங்க கூடவே இருந்து விட்டு தான் வருகிறோமே !’
‘இருந்தாலும் கூடவே இருந்து குறும்புகளையும் விளையாட்டுகளையும் ரசிக்கமுடியவில்லையே என்று இருக்கிறது.’
கனத்த மௌனத்திலிருந்து அவளை வெளியே கொண்டு வந்த உணர்வில் அவர் சுற்றிலும் பார்த்தார் .
யு.எஸ்ஸிலிருந்து தன் இலக்கை நோக்கி பறந்து கொண்டிருந்த அந்த பெரிய விமானத்தில் பலதரப்பட்ட பயணிகள் இருந்தனர். சிலர் ஹெட் ஃபோன் வைத்து சின்னத்திரையில் திரைப்படங்களை ரசித்து கொண்டிருந்தனர் .சிலர் இப்படி நேரம் திருப்பி கிடைக்காது என்பது போல் கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளுடன் சில பேர் தங்களுடைய நீண்ட பயணத்தை சமாளித்துக் கொண்டிருந்தனர்.
இது வேறுபட்ட ஒரு உலகம் என்று ரசித்துக் கொண்டிருந்தவரை அவள் குரல் கலைத்தது.
‘உங்களுக்கு வருத்தமாவே இல்லையா?’
அவள் யோசனையாக அவரைப் பார்த்தாள்.
அதிகமாக விளையாடிக்கொண்டும் மகளுக்கும் பேரனுக்கும் வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தவர் சுலபத்தில் தன்னை மாற்றிக் கொண்டு விட்டாரே!
வியப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
அவள் மன ஓட்டம் புரிந்தவராக புன்னகைத்தார் .
‘வெண்ணிலா, இங்கே பாரேன் ! நீ பாலசந்தரின் இரு கோடுகள் படம் பார்த்திருக்கிறாயா?’
‘இது என்ன புதுசா?’
‘சொல்லேன்.’
‘அதிலே சின்ன கோடு பெரிய கோடு என்று வருமில்லையா?’
‘ஆமாம் , ஒரு கோடை அழிக்காம சின்னதாக்கனும் அப்படின்னா அது பக்கத்திலே ஒரு பெரிய கோடு போடணும்’
‘அது மாதிரி ‘,என்று ஏதோ சொல்ல வந்தவர் உணவு பாக்கெட்டுகளை வரிசையாக கொடுத்துக்கொண்டு வந்த ஏர் ஹோஸ்டஸை பார்த்ததும் சின்ன டேபிளை விரித்து இருவருக்குமாக வாங்கி கொண்டவர்
தண்ணீர் பாட்டிலை லேசாக திறந்து வைத்து சாப்பிட சொன்னார்.
சூடாக இருக்கும் போதுதான் கொஞ்சமாவது சாப்பிட முடியும். இன்னும் இரண்டு மணி நேரம் தள்ளியாக வேண்டுமே என்று சிரித்தார். புன்னகைத்தபடியே இருவரும் சாப்பிட்டு முடித்தனர்
‘அதோபாரு! பாத்ரூமில் கிரீன் லைட் எரியுது. போய் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வா’ என்று அனுப்பி வைத்தார்.
வந்து ஸீட் பெல்ட்டை போட்டுக் கொண்டவள்’ இப்போதாவது சொல்லுங்க ‘என்றாள்
அவர் சிரித்தார்.
‘முன்னாடி எல்லாம் பெண்கள் ஸ்கூல் பைனல் வரைக்கும் தான் படிச்சாங்க. அப்புறம் ஒரு டிகிரி வரை அனுமதி, இல்லையா, ஒரு டீச்சர் வேலை ,பாங்க்கில் , என்று கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து இப்போ பெண்கள் தொடாத துறையே இல்லை என்று ஆகி விட்டது.’
‘ஆமாம்’ , என்று ஆமோதித்தாள் அவள்.
பையனோ பொண்ணோ நல்லா படிக்க வைக்கணும்னு நினைக்காத பெத்தவங்களே இல்லைனு சொல்லலாம் இல்லையா!
அவள் மௌனமாக கேட்டு க்கொண்டு இருந்தாள்.
‘நம்மதான் பசங்களை பெரிய கோடா வரணும்னு பாடாப் படறோம். அப்புறம் அவங்க குனிஞ்சு பார்க்கலையேனு வருத்தமும் படறோம்’.
‘மண்ணிலே செடி சின்னதா இருக்கும் போது இலை யெல்லாம் பக்கத்திலே இருக்கும். அதே மரமாகி கிளைகளை விரித்து பரந்து உயரும் போது மண்ணின் தொடர்பு இருப்பது இல்லை . ஆனாலும் மண்ணிலிருந்து வரும் நீர்தான் தங்களின் பிரமாண்டம் என்று புரிந்து கொண்டுதானே வளர்கின்றன. அது மாதிரி தான் குடும்பபாசம் . வேர் என்றைக்கும் வெளியே வந்து பார்ப்பதில்லை.’
‘அவ வயசிலே நீ வாழ்ந்திருக்கே !ஆனா நம்மோட வயசும் அனுபவமும் அவர்களின் வாழ்க்கை க்கு தடையாக இருக்க வேண்டாமே!
வேர் வழியா தண்ணீர் போற மாதிரி நம்ம பாசம் தான் அவங்களுக்கு தண்ணீர். கண்ணீரைக் கொட்டி அவர்களையும் நிம்மதி இல்லாமல் செய்ய வேண்டாமே!’
‘அப்போ பாசமே கூடாது அப்படின்னு சொல்றீங்களா!
‘ அப்படி இல்லை ,கண்ட்ரோலில் வைன்னு தான் சொல்றேன் .
‘இப்போ இந்த ஃபிளைட் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது! அதோட இலக்கை அடைய அந்த உயரம் அவசியம்.இல்லை கொஞ்சம் கீழே பற அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்!’
பாவனையுடன் அவர் சொன்னதைக்கேட்டு சிரித்துவிட்டாள் வெண்ணிலா.
சில பேருக்கு பக்கத்திலேயே இருக்க வாய்ப்பு கிடைக்குது. அவரவர் வாழ்க்கை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
‘உனக்கு தெரியுமா? எத்தனை பேர் வாய்ப்பு கிடைக்காமல் மனதுக்குள் மறுகிக் கொண்டிருக்கிறார்கள் என்று,
நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் அப்படின்னு ஒரு பாட்டு உண்டு.
‘ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தாங்க.
அவங்க அம்மா அருமையாக கதை எழுதுவாங்களாம் .ஒளிச்சு வைச்சிருந்த அந்த பேப்பரை எல்லாம் எடுத்து கிழிச்சு வெந்நீர் அடுப்பில் போட்டு விட்டார்களாம் அவங்க மாமியார்.
அப்படி எத்தனையோ பேர் தனக்கு தெரிந்த எத்தனையோ விஷயங்களை உள்ளுக்குள்ளேயே வைத்து மறுகியிருப்பாங்க தெரியுமா. சீட்டு எடுத்து கொடுக்கிற கிளிக்கு இறக்கையை மட்டும் தான் வெட்டியிருப்பார்கள் . ஆனால் உணர்வுகளுக்கே சூடு வைச்சுக்கிட்டு
உள்ளும் புறமும் ரணமாக இருக்கிறவங்களை நீ பார்த்திருக்கிறாயா?’
ஆவேசமாக அவர் பேசியவை அவளுக்கும் வலித்தது .’தெரியும்’ என்று தலையாட்டினாள்.
‘அவ்வளவுதான்! நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கிறதும் சங்கடமா ஆக்கிக்கறதும் நம்ம கையில் தான் இருக்கு.!’
ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவர் மறுபடியும் தொடர்ந்தார்.
இதே இரு கோடுகளை சமமா பார்த்தா அது ஒவ்வொரு கணவன் மனைவி உறவுக்கு வழிகாட்டும் . படுக்கை வசத்தில் அந்த கோடுகள் இருவரும் சமம் என்று வாழ்க்கைக்கே அர்த்தம் சொல்கிறதே!
அவளுக்கு புரிந்தது . மனதும் லேசாக மாறியது.
உங்க லெக்சர் இன்னிக்கு தான் ரொம்ப பிரமாதமாக இருந்தது .
சீண்டிய அவளைப் பார்த்து சிரித்தவர்
இன்னிக்கு பௌர்ணமி யா என்று நக்கலடித்தார்.
விமானம் ஒரே சீராக வானில் பறந்து கொண்டிருந்தது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.