மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து அறிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலைகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.
அதிகரிக்கும் சுமை
ஏலவே, எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் கடும் அவதியுற்றுள்ள நிலையில், பொதுமக்கள் சமையலுக்காக மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி வந்தனர்.
இப்போதைய நெருக்கடி நிலையின் காரணமாக அதிக விலை கொடுத்தும், பல மணிநேரங்கள், பல நாட்கள் என வரிசைகளில் காத்திருந்தும் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.
பலர் ஒரு நாளில் ஒரு நேர உணவை மாத்திரம் பெற்றுக் கொள்வதுடன், நாளின் பெரும்பகுதியை எரிபொருள் வரிசையில் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் மண்ணெண்ணெய்யின் விலையை அதிகரித்தல் என்பது பொதுமக்களின் வாழ்க்கையைச் சுமையை மேலும் அதிகரிப்பதாகவே கருதப்படுகின்றது.