முனிச்: உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக, ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த, அந்நாட்டிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிப்பதற்கான அறிவிப்பை ஜி-7 நாடுகள் வெளியிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் நேற்று தொடங்கி 28-ம் தேதிவரை நடக்கிறது. இதில் இந்தியா உட்பட சில நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றன.
முதல் நாளான நேற்று, ரஷ்யா ஊடுருவலால் ஏற்பட்ட தாக்கங்கள், எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்பது, பணவீக்கத்தை சமாளிப்பது குறித்து ஜி-7 நாடுகள் ஆலோசித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யாவை தண்டிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
‘‘எரிசக்திக்கு அடுத்தபடியாக, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாக தங்கம் உள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால் அது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். உலக சந்தையில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது’’என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்த முறையான அறிவிப்பு ஜி-7 உச்சிமாநாட்டில் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி-7 உச்சிமாநாடு நேற்று தொடங்குவதற்கு முன்பாக, உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 2 கட்டிடங்கள் சேதம் அடைந்ததாக உக்ரைனின் கீவ் நகர மேயர் விடாலி கிலிட்ஸ்கோ தெரிவித்தார். 3 வார இடைவெளிக்குப்பின் நேற்றுமுதல் முறையாக ரஷ்யா உக்ரைன்மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.