ஒப்பீட்டளவில் தென்னிலங்கையை விட மாற்றீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் (26) குறிப்பிட்டுள்ளார்.
உணவு தட்டுப்பாடு ஏற்படுமாயின் அதனை முன்னே உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்படும் பக்குவமும் அனுபவமும் யாழ் மக்களிடம் உண்டு.
பல இளைஞர்கள் விவசாயத்தில் நாட்டம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் வீட்டுத்தோட்டங்களை ஆரம்பித்து, தென்னைசார் கைத்தொழில்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
IT தொழில்துறையில் ஈட்டும் வருமானத்தை விவசாயத்தில் முதலீடு செய்யும் பல இளைஞர்களை யாழ் மண்ணில் சந்தித்துள்ளேன்.
தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆரம்ப நடவடிக்கைகள் இப்போது யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கு பக்கபலமாக புலம்பெயர் முதலீடுகளும், கல்வியறிவும் பெரிதும் கைகொடுக்கின்றன.
எரிவாயு அடுப்புகளுக்கு பழக்கப்பட்டிருந்தாலும் விறகு மீதான ஆர்வம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
மக்கள் பிரதிநிதியாக தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை எமது மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி பொருட்களை கட்டுப்படுத்தி அவற்றை நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வாய்ப்பு வடக்கிற்கு உள்ளது.
உர இறக்குமதியை தொடர்ந்து வருகிற பெரும்போகத்தில் நெல் வயல்கள் அதிக விளைச்சலை தருமென எதிர்பார்க்கப்பதாகவும் குறிப்பிட்டார்.
விவசாய குளங்களை அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் புனரமைத்துள்ளோம். எனவே தேவையான அளவு உரமும் எரிபொருளும் எமது விவசாயிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் விவசாய பங்களிப்பை எமது மக்கள் வழங்குவார்கள்.
ஒப்பீட்டளவில் அந்நிய செலவாணியை நுகரும் மக்கள் தொகை நாட்டின் வடக்கிலேயே அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் செயற்பட ஆரம்பிக்கும் போது சுற்றுலாசார், ஏற்றுமதி வர்த்தகங்கள் ஊடான வருவாயும் எமது பகுதிகளிலிருந்து கிடைக்கும்.
குறிப்பாக கருவாட்டு உற்பத்தி, தெங்கு சார் உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், பற்றிக் ஆடை உற்பத்திகள் போன்ற துறைகள் மீளவும் வேகமெடுக்கும்போது அவற்றினூடாக கணிசமான அளவு வருமானம் கிடைக்கும். அதற்காகவே உற்பத்தி கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன.
உள்ளூர் உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துனர்கள், தொழில்முனைவோர்கள் எமது பிரதேசங்களில் இந்த நெருக்கடிநிலையில் கைகொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
பிரதேச மட்டத்தில் ஆரம்பித்து நாடு தழுவிய முன்னேற்றத்தை ஏற்படுத்த எமது பிரதேசங்களை சேர்ந்தவர்கள் நிச்சயம் பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.