உத்தரப்பிரதேசம், லக்னோவில் திருநர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் கைசர்பாக் பகுதி காவல் நிலையத்தில் முதன்முறையாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநிலத்தின் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த்குமார் கூறுகையில், ’திருநர்களின் குறைகளைக் கண்டறிவதற்காக உதவி மையத்தைத் திறந்து வைப்பதாக மே 2 அன்று முடிவு எடுக்கப்பட்டது. இத்துணை சீக்கிரம் மையம் திறக்கப்பட்டது கூடுதல் சிறப்பு’ என்று தெரிவித்திருக்கிறார்.
கூடுதல் டிஜிபி சிரஞ்சீவி நாத் சின்ஹா கூறுகையில், ’திருநர்களுடன் பேசுகையில் அவர்கள் எப்போதும் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். அவர்கள் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படாமலேயே இருக்கின்றன. இந்த உதவி மையம் திருநர் சமூக மக்களின் குறைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும்.
திருநர் சமூக மக்களின் புகார்களை நிவர்த்தி செய்ய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சங்கம் யாதவ் அதன் பொறுப்பாளராகவும், நான்கு பெண் போலீஸ் கான்ஸ்டபிள்களும் ஷிஃப்ட் வாரியாக உதவி மையத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, தேவைப்பட்டால் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு முடித்துவைப்பார்கள்.
24 முதல் 48 மணி நேரத்திற்குள் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். இந்த உதவி மையம் திருநங்கைகளின் பட்டியலையும் அவர்களின் தொடர்பு எண்களையும் பராமரிக்கும் என்றும் தெரிவித்தார்.
– சுபா ஆறுமுகம்