திருமணங்கள் என்றதுமே அனைவருக்கும் கொண்டாட்டங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனாலும் சண்டை சச்சரவு இல்லாத திருமண வீடே இருக்க முடியாது. அதுவும் இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் என்றால் திணுசு திணுசாக ரகளை செய்வதில் வல்வர்களாக இருப்பர்.
இப்போ நாம பார்க்க போகிற நிகழ்வும் அப்படிதான். பெரும்பாலும் உறவினர்களோ வேறு எவரோதான் திருமண வீட்டை களேபரமாக்குவார்கள். ஆனால் மணமகனே இங்கு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள பஹதுராபாத்தில்தான் ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அமர் உஜாலா என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ரவி என்பவர் தனது திருமணத்துக்கான அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுக்கும் படியும், திருமண வேலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் படியும் அவரது நண்பர் சந்திரசேகரை அணுகி வலியுறுத்தியிருக்கிறார்.
சந்திரசேகரும் ரவியின் வலியுறுத்தலை ஏற்று எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார். இப்படி இருக்கையில், அழைப்பிதழில் குறிப்பிட்டபடி திருமணத்திற்கான ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெற இருந்தது. இதற்காக சந்திரசேகர் உள்ளிட்ட பிற நண்பர்களும் ரவியின் வீட்டிற்கு உரிய நேரத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
ஆனால் ரவியோ திருமண ஊர்வலத்திற்காக (பராத் – Baraat) ஏற்கெனவே புறப்பட்டு சென்றிருக்கிறார். இதையடுத்து ரவிக்கு போன் செய்து அவர் இருக்கும் இடம் குறித்து சந்திரசேகர் விசாரித்திருக்கிறார். ஆனால் ரவியோ தான் முன்பே புறப்பட்டுவிட்டதை நண்பர்களுக்கு தெரியப்படுத்தாதை ஒப்புக்கொள்ளாமல், நீங்கள்தான் தாமதமாக வந்திருக்கிறீர்கள் எனச் சொல்லி நண்பர்கள் சந்திரசேகர் உள்ளிட்ட அனைவரையும் திட்டிவிட்டு அவரவர் வீட்டுக்குக் செல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார்.
ரவியின் இந்த பேச்சால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான சந்திரசேகரும் பிற நண்பர்களும், அவரது திருமணத்துக்கு ஓடி ஓடி வேலை பார்த்தது இந்த பேச்சை கேட்கத்தானா என பெரிதளவில் நொறுங்கிப்போயிருக்கிறார்கள்.
ALSO READ:
நானூறு கோடிப்பு.. ’பத்தல பத்தல’னு விக்ரம் படத்தை காண தியேட்டருக்கு படையெடுக்கும் மக்கள்!
தன்னை அவமதித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர் தனது வழக்கறிஞரை அழைத்து ரவியிடம் ரூ.50 லட்சம் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்குத் தொடுக்கும் படியும், மூன்று நாட்களுக்குள் பகிரங்கமாக ரவி தங்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி நோட்டீஸ் அனுப்ப கூறியிருக்கிறார்.
பின்னர் மணமகன் ரவிக்கு தொலைபேசி மூலம் சந்திரசேகரின் நோட்டீஸ் குறித்தும் தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரவி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சந்திரசேகர் தரப்பு முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஹரித்வாரில் பெரும் பரபரப்பும் நிலவியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM