Ruturaj Gaikwad – Deepak Hooda Tamil News: அயர்லாந்து மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இளம் படையை கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியை ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட், மிடில் -ஆடர் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இந்த இரு வீரர்களை தவிர, தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அனைத்து வீரர்களும், இவர்களுடன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதிய முதலாவது டி-20 ஆட்டம் டப்ளினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனிடையே மழையின் குறுக்கீடால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் – இஷான் கிஷன் ஜோடி களமிறங்கும் என எதிர்பார்க்கையில், மிடில் -ஆடர் வீரர் தீபக் ஹூடா தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் அணிக்கு தொடக்கம் கொடுத்தனர். ருத்துராஜ் என்ன ஆனார்? என பலரும் கேள்வியெழுப்பி நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதுதான் உண்மையான காரணம் என சிலர் நம்ப மறுக்கிறார்கள். பின் என்ன தான் காரணம்? என்று நாம் ஆராய்ந்து பார்க்கையில், நேற்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களமாடியா ஹூடா ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். அவரது துல்லியமான பந்துகளால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பேட்டிங்கை பொறுத்தவரை, நடப்பு ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அவரின் ஆட்டம் எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம்.
இதைக் கவனித்து வந்த இந்திய அணி நிர்வாகம் அவரை நேற்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹூடா 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏற்கவே ஐபிஎல்லில் கவனம் ஈர்த்த அவரின் ஆட்டம் நேற்றைய ஆட்டத்தில் அவரின் அதிரடியால் மீண்டும் உற்றுநோக்க வழிவகை செய்தது.
சமீபத்தில் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஹூடாவுக்கு வாய்ப்பே கிடைவில்லை. முழுத்தொடரையும் பெஞ்சிலே கழித்திருந்தார். ஆனால், 5ல் 4 போட்டிகளில் (பெங்களுருவில் நடக்க இருந்த 5வது மற்றும் கடைசி போட்டி மழையால் நடக்கவில்லை) தொடக்க வீரராக களமிறங்கி இருந்த ருத்துராஜ் ஃபார்மிற்கு வருவதற்குள் 2 போட்டிகள் முடிந்து விட்டன. அவர் தொடரில் மொத்தமாகவே 96 ரன்கள் தான் அடித்திருந்தார்.
டி20 உலகக் கோப்பைக்கு கணக்கு போடும் இந்தியா…
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக மிகவும் கவனமாக வீரர்களை தேர்வு செய்து தயாரித்து வருகிறது இந்தியா நிர்வாகம். இத்தொடருக்கான இந்திய அணியைப் பொறுத்தவரை, மூத்த வீரர்கள் சிலருக்கு அணியில் இடம் உண்டு. குறிப்பாக முன்னாள் கேப்டன் கோலிக்கு. அணிக்கு தொடக்கம் கொடுக்கும் வீரருக்கான பட்டியல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தவான் அல்லது கேஎல் ராகுல் அணியில் இடம்பிப்பிடிப்பர். தற்போது ராகுல் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அவர் மீண்டும் ஃபிட் என்றால் அவருக்கு வாய்ப்பு நிச்சயம்.
அயர்லாந்து தொடரில் விளையாடும் அணியில் இஷான் கிஷன் பேக்-அப் வீரராக பயன்படுத்த வாய்ப்பு உண்டு. ஆனால் ருத்துராஜ் கெய்க்வாட்டை பற்றி அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பதில் பெரும் கேள்வி எழும்புகிறது. அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளராக ஜடேஜாவும், லேக் ஸ்பின்னராக சாஹலும் இருப்பார்கள். எனவே, அணியில் கூடுதலாக ஒரு ஆஃப் ஸ்பின்னர் இருந்தால், அணிக்கு கூடுதல் வலு கொடுக்கும். எனவே, தீபக் ஹூடா போன்ற வீரரை அணி நிர்வாகம் பரிந்துரைக்கும். இதனால் தான் விவிஎஸ் லட்சுமண் நேற்றைய ஆட்டத்தில் ருத்துராஜ்க்கு பதில் ஹூடாவை களமிறக்கியுள்ளார்.
அப்படியென்றால், ருத்துவின் நிலை?. ருத்துராஜ், அவருக்கான இடத்தை தக்க வைக்க தொடர்ந்து போராடியே ஆக வேண்டும். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் ஆடிய அந்த அதிரடி ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும். இங்கு ஃபார்ம் அவுட் என்பது தற்காலிகம் தான். அவருக்கான பிசிசிஐ-யின் கதவுகள் ஏற்கனவே திறந்து விட்டன. இனி அணியில் தனக்கான இடத்தை தக்க வைக்க வேண்டியது அவரின் கையில் உள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil