பெலகாவி: கர்நாடகாவில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகக் தாலுகா அக்கா தங்கேரஹல்லா கிராமத்தில் இருந்து கனரக வாகனம் ஒன்றில் நேற்று 20 தொழிலாளர்கள் தேசூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கனபராகி கிராமம் அருகேவந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து உருண்டது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக பெலகாவியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தது. காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகனம் கல்யால் பகுதியில் உள்ள சிறிய பாலம் அருகே வந்தபோது வாகனத்தின் வேகத்தை குறைக்க டிரைவர் பீமேஷ் முயன்றுள்ளார். ஆனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து பள்ளத்தில் விழுந்து உருண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாரேஹால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.