கரூர் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றபிறகு முதன்முதலாக கரூர் மாவட்டத்துக்கு வரும் 1-ம் தேதி கரூருக்கு வருகைதரவிருக்கிறார்.
தான்தோன்றிமலை அரசு பயணியர் விடுதியில் தங்கும் முதல்வர் 2-ம் தேதி திருமாநிலையூர் பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் வரும் வழி எங்கும் 1 லட்சம் பேர் திரண்டிருந்து வரவேற்பளிக்க வேண்டும். விழா மேடையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 76,000 பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருகின்றன.
நம் பகுதிகளில் நலத்திட்டங்கள் பெற தகுதி இருந்தும், பெறாமல் இருப்பவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டறிந்து சொன்னால் அவர்களுக்கு முதல்வர் கையால் நலத்திட்டங்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் தி.மு.க மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. அது போல எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறுவோம். தமிழ்நாடடில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியா முழுவதும் கிடைக்க பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நம் முதல்வர் இருக்க வேண்டும். ஆனால், எதிர்முகாமை சேர்ந்த ஒரு மணி, `தி.மு.க ஆட்சிக்கு மக்கள் மணி அடிப்பார்கள்’ என்று பேசியிருக்கிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த அந்த கிரிப்டோ மணியாக இருந்தாலும் சரி, எந்த மணியாக இருந்தாலும் சரி, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. கறந்தபால் ஒருபோதும் மடி புகாது, ஊர்க்குருவி பருந்தாகாது, முட்டிப் போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர்.
இன்னும் நூறு ஆண்டுக்காலம் தமிழ்நாட்டை ஆளப்போவது தி.மு.க-தான். சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு மக்கள் அளித்த பேராதரவே அதற்கு சாட்சி. கரூர் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டில் 3,000 கோடி ரூபாய் திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். கரூர் மாவட்டத்திற்கு ஜூலை 1-ம் தேதி வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க, ஒரு லட்சம் பேர் எழுச்சியோடு கலந்துகொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும்” என்றார்.