சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கடும் அமளியுடன் முடிந்தது. இந்த கூட்டத்தின் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பொதுக்கூட்டத்தில் உரிய மரியாதை கிடைக்காததால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு, ஒற்றைத் தலைமை விவகாரம் பூகம்பமாக வெடித்து வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தில் சிவகாசி பிரதான சாலையில் எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சண்முகவேல் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஒன்றுகூடினர். அதன் பிறகு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், எடப்பாடிபழனிசாமி எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது போன்று பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டம் மற்றும் எடப்பாடி பழனிசாமி எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.