மாஸ்கோ,-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிக்கும் ‘கிரெம்ளின்’ மாளிகைக்கு, அவரது பாதுகாப்பு வாகனங்கள் வேகமாக வந்த காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, பல ஊகங்களை கிளப்பி விட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் உள்ளதாக, சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதையடுத்து, ஒரு நிகழ்ச்சியில் அவர் கைகுலுக்கும் போது கைகள் நடுங்கியதும், கால்கள் தள்ளாடியதும், அவர் உடல்நிலை குறித்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதாக இருந்தன. இந்நிலையில், மாஸ்கோவில் புடின் வசிக்கும் கிரெம்ளின் மாளிகைக்கு, நேற்று இரவு 11:00 மணி அளவில், அவரது பாதுகாப்பு வாகனங்கள் வேகமாக விரைந்தன. அத்துடன், புடின் காரும் சென்றது. இதைப் பார்த்த ஊடகங்கள், பெலாரஸ் அதிபருடன் புடின் நடத்திய பேச்சை அடுத்து, அவர் முக்கிய செய்தியை வெளியிட உள்ளதாக தெரிவித்தன.
இதை, ரஷ்ய அரசு உடனே மறுத்து அறிக்கை வெளியிட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில், ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு வீடு சேதம் அடைந்தது. இது, கடந்த ஏப்ரலுக்கு பின் கீவ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலாகும்.இந்நிலையில், புடின் மாளிகைக்கு பாதுகாப்பு வாகனங்கள் வந்த காட்சி, சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement