புதுடெல்லி: நடைபெறவிருக்கின்ற குடியரசுத் தலைவர் தேர்தலை, இரண்டு தத்துவங்களுக்கு இடையிலும், இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலும் நடைபெறுகின்ற ஒரு போட்டியாக பார்ப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சென்றனர். வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “இஸ்லாமியர் அடையாளம் என்கிற அடிப்படையில் அப்துல் கலாமையும், தலித் அடையாளம் என்கிற அடிப்படையில் ராம்நாத் கோவிந்தையும், பழங்குடியினர் அடையாளம் என்கிற அடிப்படையில் இன்று திரவுபதி முர்முவையும் வேட்பாளராக நிறுத்துகிற நிலைப்பாட்டை தொடர்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எடுத்து வருகின்றன.
ஆனால், அதற்கு நேர்மாறாக கொள்கை அடிப்படையிலே வேட்பாளர்களை நிறுத்துவது, ஆதரிப்பது என்கிற முடிவை காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக. திரிணாமூல் காங்., டிஆர்எஸ், விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவெடுத்திருக்கிறோம்.
இது இரண்டு தத்துவங்கள், இரண்டு கோட்பாடுகளுக்கு இடையில் நடைபெறுகிற ஒரு போட்டியாக பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.