உத்தரகாண்ட் மாநிலத்தின் இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்துக்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை அக்டோபர் மாத இறுதியில் முடிவடைய உள்ளது.
இதுவரை யாத்திரை சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 2,50,000-தை தாண்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக கேதார்நாத் பகுதி முழுவதும் மேகமூட்டம் மற்றும் பனி சூழ்ந்து இருந்த நிலையில், தற்போது அங்குக் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. எனவே அப்பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாத்ரீகர்களின் வருகை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கேதார்நாத் யாத்திரைப் பாதையில் 95 யாத்ரீகர்களும், பத்ரிநாத் தாமில் 51 பேரும், கங்கோத்ரியில் 13 பேரும், யமுனோத்ரியில் 42 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று டேராடூனில் உள்ள மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது பற்றி உத்தரகாண்ட் டைரக்டர் ஜெனரல் ஷைலஜா பட் கூறுகையில், “பரிசோதனை மையங்கள் மூலம் பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக யாத்திரையில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு வழங்குதல் மற்றும் ஹெலி-ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.