கோவை மாவட்டம், ஆலந்துறை முள்ளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த சந்திரன் கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கோபால், நஞ்சப்பன், சின்ன ரத்தினம் ஆகியோர் ஒரு தோட்டத்தில் வேலை இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
இதனிடையே அங்கு திடீரென கோபால் உள்ளிட்ட மூன்று பேரும் இணைந்து சந்திரன்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது நகையை சந்திரன் எடுத்து விட்டதாகக் கூறி அவரை கட்டி வைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சூடு வைத்திருக்கின்றனர்.
சந்திரன் வலியால் கதறித் துடித்துள்ளார். சந்திரனை மூன்று பேரும் தொடர்ந்து சரமாரியாக தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சந்திரன் ஆலந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கை, கால்களை கட்டிப் போட்டு சூடான இரும்புக் கம்பியைப் பிடிக்கவைத்து கொலைசெய்ய முயற்சி செய்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.