சென்னை: சனாதன தர்மம், மதம் ஆகியவற்றை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது. இரண்டும் வெவ்வேறானவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் முகப்பு கட்டிடமான ‘ஏழைகளின் அரண்மனை’ மற்றும்உறைவிட உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவுக்கு ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நூற்றாண்டு விழாவையொட்டி வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். நலிந்த நாடகக் கலைஞர்கள், துப்புரவுப் பணியாளர்கள், விதவைகளுக்கு ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆளுநர் பேசியதாவது:
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதர்களுக்கு மாபெரும் சக்தியை வழங்கியுள்ளது. அதுவேதற்போது ஆபத்தாகவும் மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நாம் முடிவெடுக்க வேண்டும்.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்ததால், அரசியல், பொருளாதாரம் மட்டுமின்றி நமது கலாச்சாரத்தையும் பெரிய அளவில் இழந்துவிட்டோம்.
அப்போது நம் வாழ்க்கை முறை, தர்மவழிகளில் இருந்து திசை திருப்பப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும், வெளியேபோதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.
இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. அதுபோல, நாட்டின் முதுகெலும்பாக சனாதன தர்மமே இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நம்மைப் பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.
உண்மையிலேயே சனாதனமும், மதமும் வெவ்வேறானவை. மதம் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதன தர்மத்தை பின்பற்றி உள்ளனர். எனவே, இரண்டையும் ஒப்பிடக் கூடாது.
நம் நாடு தற்போது விழித்துக் கொண்டுள்ளது. விவேகானந்தர், மகாத்மா காந்தி கூறிய ஆன்மிக வழியில் மக்கள் சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கியுள்ளனர்.
ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிராக செயல்படுவது சரியல்ல. அனைத்து கடவுள்களுக்கும் இடமுள்ளது. ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அது தர்மமே இல்லை.
விவேகானந்தரின் கனவு பாரதத்தை உருவாக்க, தர்மத்தை வளர்க்க வேண்டும். அதற்கு ஆன்மிக வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் கூறினார்.
‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி பேசும்போது, ‘‘வெளிநாடுகளில் 55 சதவீத முதல் திருமணங்களும், 67 சதவீத 2-வது திருமணங்களும் விவாகரத்தில் முடிகின்றன. 28 சதவீத திருமணங்கள் மட்டுமே நீடிக்கிறது. பெரும்பாலான நாடுகளில் குடும்பம் என்ற அமைப்பே கிடையாது. குறிப்பாக, வல்லரசு நாடுகளில் தற்போதுள்ள பெரும் சிக்கலேவயதானவர்களை பார்த்துக் கொள்வதுதான். இந்தியாவில் இத்தகையசூழல் இல்லாமல் இருப்பதற்கு, நம் குடும்ப அமைப்பே காரணம். மேற்கத்திய ஆதிக்கத்தில் நீண்டகாலமாக இருந்தும்கூட நம் கலாச்சாரமும், பாரம்பரியமும் காப்பாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஞானிகள், ஆன்மிகவாதிகளின் சேவை முக்கிய காரணமாகும்’’ என்றார்.
தமிழ்நாடு தலைமை அஞ்சல்துறை தலைவர் பி.செல்வக்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.