புதுடெல்லி: உத்தரப் பிரதேச மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதியின் வெற்றிக்கு மீண்டும் மாயாவதி தடை ஏற்படுத்தி உள்ளார். இவரது பகுஜன் சமாஜ் கட்சி ராம்பூரில் வேட்பாளரை நிறுத்தாதாலும், ஆஸம்கரில் போட்டியிட்டதாலும் சமாஜ்வாதியின் வாக்குகள் பிரிந்துள்ளன. இவை பாஜகவிற்கு சாதகமாகி, சமாஜ்வாதி இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்து அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி போட்டியிட்டது. இரண்டில் பெற்ற வெற்றியில் ஆஸம்கரில் அகிலேஷ், 6,21,578 வாக்குகள் பெற்றிருந்தார். இதற்கு, முஸ்லிம், யாதவர் மற்றும் தலித் வாக்குகள் கிடைத்தது காரணமானது. ஆனால், தற்போது முடிந்த இடைத்தேர்தலில் பிஎஸ்பி சார்பில் குடு ஜமாலி என்ற முஸ்லிம் வேட்பாளர் போட்டியிட்டார். இவர், ஆஸம்கர் தொகுதியில் கணிசமான செல்வாக்கும் பெற்றவர்.
இதன் காரணமாக அதன் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகள் குட்டுவிற்கு கிடைத்துள்ளது. எஸ்பியின் வாக்குகள் பிரிந்து அதன் வேட்பாளரான தர்மேந்தர் யாதவிற்கு தோல்வி கிடைத்துள்ளது. குட்டுவிற்கு 2,66,210, தர்மேந்தருக்கு 3,04,089 வாக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விரண்டு கட்சிகளின் வாக்குகளும் சேர்த்தால் 5,70,299.
இந்த எண்ணிக்கையின்படி, கடந்த 2019 இல் அகிலேஷ் பெற்றதை விட 51,279 வாக்குகள் இடைத்தேர்தலில் குறைந்துள்ளது. பிஎஸ்பியின் போட்டியால் இவை, பாஜகவிற்கு சென்று விட்டன. வழக்கமாக இடைத்தேர்தல்களில் தனது வேட்பாளர்களை மாயாவதிக்கு போட்டியிட வைக்கும் வழக்கம் இல்லை. ஆனால், இந்தமுறை, ஆஸம்கரில் மட்டும் எஸ்பியின் வெற்றியை தடை ஏற்படுத்த பிஎஸ்பி வேட்பாளர் போட்டியிட வைக்கப்பட்டார்.
பாஜகவின் வேட்பாளர் தினேஷ் லால் யாதவிற்கு 3,12,768 வாக்குகளுடன் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி 2009 மக்களவை தேர்தலுக்கு பின் இரண்டாவது முறையாக பாஜகவிற்கு கிடைத்துள்ளது.
இதேநிலையை, மற்றொரு மக்களவை தொகுதியான ராம்பூரிலும் மாயாவதி, எஸ்பிக்கு ஏற்படுத்தி உள்ளார். இது, எஸ்பியின் மூத்த தலைவரான ஆஸம் கான், சட்டப்பேரவைக்கு தேர்வானதால் ராஜினாமா செய்யப்பட்டது.
காங்கிரஸும் ராம்பூரில் எஸ்பிக்கு மறைமுக ஆதரவளித்து போட்டியிலிருந்து விலகியது. இதனால், பாஜக மற்றும் எஸ்பிக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. இதில், எஸ்பியின் தலித் வாக்குகள் பாஜக வேட்பாளருக்கு சென்றன. இதில், எஸ்பியின் வேட்பாளர் அசீம் ராசாவை விட 42,192 வாக்குகள் அதிகம் பெற்று பாஜகவின் கன்ஷியாம் சிங் லோதி வெற்றி பெற்றுள்ளார்.
ராம்பூரில் பாஜக நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இத்தனைக்கும் ராம்பூரும், ஆஸம்கரும் ஐம்பதிற்கும் அதிகமான சதவிகிதத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகள். கடந்த மார்ச்சில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எஸ்பியின் வெற்றிக்கு மாயாவதியின் பிஎஸ்பி தடையாக இருந்ததாகப் புகார் எழுந்தது. இதன்மூலம், பாஜக இரண்டாவது முறையாக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்திருந்தது.
இதேவகையில், மக்களவைக்கான இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றியின் பின்னணியில் மாயாவதி இருந்திருப்பது தெரிந்துள்ளது. இந்த முடிவுகள் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை உற்சாகப்படுத்தி உள்ளது. அடுத்து 2024 இல் வரும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிக்கான நம்பிக்கையையும் அளித்துள்ளது.