சிங்கப்பூரில் மலர்ந்த காதல்… சேலத்தில் திருமணம்… – பிரெஞ்சு காதலரைக் கரம்பிடித்த தமிழ்ப் பெண்

சேலம்: சேலத்தை சேர்ந்த இளம்பெண் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அயல்நாட்டு காதலரைக் கரம்பிடித்த தமிழ் பெண்ணின் திருமணத்தில் பலரும் கலந்து கொண்டு புதுமண ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர் கந்தசாமி – சுகந்தி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பொறியாளர் கிருத்திகா சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாடு, பாரிஸ் நகரை சேர்ந்த பென்னடி – அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் அசானே ஒச்சோயிட்டுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதுகுறித்து பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்றார். இந்த காதல் ஜோடியின் விருப்பத்தை இருவீட்டாரும் ஒத்த மனதோடு ஏற்றுக் கொண்டு, திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதன்படி, திருமணத்தை தமிழ் பாரம்பரிய முறைப்படி நடத்திட முடிவானது. பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு தமிழகம் வந்து, வாழப்பாடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சேலம் 5 ரோடு பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில், வாழப்பாடியைச் சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்துக்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், பட்டு வேட்டி- சட்டை, பட்டு சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம், அல்வா ஆகியவற்றை, பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். அயல்நாட்டில் மலர்ந்த காதல், தமிழகத்தில் திருமண பந்தத்தில் முடிந்ததை பலரும் புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.