சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக குறைதீர்வு கூட்டங்களை நடத்த மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர், ‘‘சென்னை மாநகராட்சி, குடிநீர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உள்ளிட்ட பல்துறை அடங்கிய ஒருங்கிணைந்த குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, மாநகராட்சி வளர்ச்சியை மேம்படுத்த முடியும்,’’ என்று தெரிவித்தனர். இதற்கு பதலளித்த மேயர், ‘முதல்வரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த சில நாட்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சாரத்துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறை அலுவலர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு மண்டல குழு தலைவரும் தங்களது மண்டலத்தில் உள்ள பிரச்சனை பேச அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக குறைதீர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ” சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி தொடர்பான மக்களின் குறைகளை மட்டும் பார்ப்பவர்கள் அல்லது. அவர்களின் வார்டில் உள்ள அனைத்து குறைகளையும் அவர்கள்தான் தீர்க்க வேண்டும். ஆனால் சென்னையில் அனைத்து துறைகளும் தனித்து தனியாக குறை தீர்வு முகாம்களை நடத்துகின்றன.
குடிநீர் வாரியம், நுகர்பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட பல துறைகள் தனித்தனியாக குறை தீர்வு முகாம்களை நடத்துகின்றனர். எனவே ஒரே நாளில் அனைத்து துறைகளும் இணைந்து மண்டலம் வாரியா குறை தீர்வு முகாம்களை நடத்தினால் எளிதாக இருக்கும் என்று தெரிவித்தனர். இது குறித்து ஆலோசனை நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.