பெங்களூரு:
10 கூட்டங்கள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மத்திய அரசின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்கலா பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதில் ஜி-20 நாடுகள் உச்சி மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-
ஜ-20 நாடுகள் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 20 நாடுகளுடன் ஏதாவது ஒரு வகையில் நமக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் கர்நாடகத்தில் 10 கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு உரிய இடம் கிடைப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.
புத்தொழில் நிறுவனங்கள்
இந்த 10 கூட்டங்கள் நடத்தும்போது, கர்நாடகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்து கூறும்படி அதிகாரிகளை கேட்டு கொள்கிறேன். கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) இருக்கின்றன. வரும் நாட்களில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, மின் சாதனங்களில் பொருத்தப்படும் ஷிப்புகள் உற்பத்தி மையமாக கர்நாடகம் மாறும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
முன்னதாக பேசிய ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்கலா, ”உலக பொருளாதார வளர்ச்சியில் ஜி-20 நாடுகளின் பங்கு முக்கியமானது. இந்த நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு தற்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த சபையை நடத்துவதற்கு முன்பு நாடு முழுவதும் இதுகுறித்து 20 கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடகத்தில் 10 கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு மாநில அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.