ஈரோடு: தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகத்தில் 40 சதவீதம் மண் மலடாகி விட்டது. சத்குருவின் வேண்டுகோளை ஏற்று 16-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், மண் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளன. அதேபோல், தமிழக அரசும் மண் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் இந்து வாக்கு வங்கி உருவாகிவிட்டது. அதன் காரணமாக பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. எனவே, தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் புதிய தேசிய கல்விக் கொள்கையை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
நிர்வாகம் மற்றும் வளர்ச்சி நோக்கில், தமிழகத்தைப் பிரித்து, 3 புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு சனாதன பூமி. தமிழனையும் சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது. கோயில்களை ஆன்மிகவாதிகள்தான் நிர்வகிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.