மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலை மாறியுள்ளதாகவும், நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் எனவும், இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும் எனவும் பேரறிவாளனின் தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையாகி சென்ற நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், இன்று அவர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’ராபர்ட் பயாஸுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் பார்க்க வந்தேன். அவருடைய உடல் நலம் சீர்கெட்டுள்ளது. அவர் உடனடியாக வெளியே வருவது நல்லது. உடல்நிலை காரணமாக பரோலுக்கு முயற்சி செய்கிறார். அவருக்கு பரோல் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. உடல் நிலையை கருதி உடனடியாக பரோல் வழங்க வேண்டும்.
பேரறிவாளனின் தீர்ப்பு அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உள்ளது. மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலைமை மாறியுள்ளது. நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும். இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும். முதல்வரும் கவனிப்பார். பேரறிவாளனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே பரோல் கேட்டோம், அதேபோல் இப்போது ராபர்ட் பயாஸின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் பரோல் வழங்க வேண்டும்.
பேரறிவாளனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வரும். இருப்பினும், பேரறிவாளன் முழு நிம்மதியுடன் இருக்கிறார் எனக் கூறமுடியாது. உடன் சிறையில் இருந்தவர்கள் வெளியில் வரவில்லை என்ற கவலை அவருக்கு உள்ளது. பூரண மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. குளறுபடியான வழக்கில், தாம் மட்டும் வெளியே வந்திருப்பது சங்கடமாக இருப்பதாக பேரறிவாளன் தெரிவித்தார். இந்த தீர்ப்பின் அடிப்படையில் அனைவருக்கும் நல்லது நடக்கும். முதல்வர் நல்ல முடிவெடுப்பார்.
31 ஆண்டுகள் பேரறிவாளன் சிறையில் இருந்தபிறகு இப்போது அவர் குற்றமற்றவர் என நிரூபணமாகியுள்ளது. இதில் முதல் பாதிப்பு எங்களுக்குத்தான். எங்கள் விடுதலைக்கு அவர்கள் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? எந்த நீதிமன்றத்தை வைத்துக்கொண்டு கொலைகாரன் என்றார்களோ, அதே நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தை அணுகி கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக்கூடாது. பேச முடிவெடுத்தவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது’’ என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM