நில மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை; முழு மானியத்துடன் செயல்படுத்த வலியுறுத்தல்| Dinamalar

பாகூர்: விளை நிலங்களை மேம்படுத்திட, ஏரிகளில் நுாறு சதவீத மானியத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் பெரும்பாலான பகுதியில் ‘போர்வெல்’ நீர் மூலமாக விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே வகையான பயிர்கள் பயிரிடப்படுவதால், விளை நிலங்களில், மண் வளம் பாதித்து, மகசூல் குறைந்து வருகிறது.

மண்வளம் பாதிப்பு

மகசூலை அதிகரிக்க வேண்டி விவசாயிகள் பல்வேறு ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விளை நிலம் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் மலடாகி விடும் ஆபத்து உள்ளது.அதனை தவிர்க்கவும், நீர் நிலைகளின் கொள்ள ளவை அதிகரித்து நீர் வளத்தை பெருக்கிடும் வகையில், ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்தி விளை நிலங்களை மேம்படுத்தும் ‘நில மேம்பாடு’ திட்டம் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டது.அத்திட்டத்தில், நிலத்தை மேம்படுத்த விரும்பும் விவசாயி, எந்த ஏரியில் இருந்து, எவ்வளவு மண் எடுக்க விரும்புகிறார் என்பதை, வேளாண் துறையில் மனுவாக கொடுக்க வேண்டும்.

அரசு மானியம்

அதனைத் தொடர்ந்து வேளாண் துறை பரிந்துரையின்படி, விவசாயி குறிப்பிட்ட நீர் நிலையில் மண் எடுக்க வேண்டிய பகுதியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கொடுப்பர்.விவசாயி தனது செலவில் மண் எடுத்துச் சென்று, நிலத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, மண் ஏற்றிச் சென்றதற்கான வாகன செலவை, வேளாண் துறை பின்னேற்பு மானியமாக வழங்கி வந்தது.

latest tamil news

விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ‘நில மேம்பாட்டு திட்டம்’, கடந்த 2004ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. இதனால், விளை நிலங்களை மேம்படுத்தும் பணி முற்றிலுமாக தடைப்பட்டது.இதற்கிடையே, கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதலில், கடற்கரையோர பகுதியில் உள்ள விளை நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலங்களின் உவர் தன்மையை மாற்றிட, வண்டல் மண் தேவை அதிகரித்தது.அதனால், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விவசாயிகள், அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

புதிய திட்டம்

இந்நிலையில், நீர்நிலைகளில், கொள்திறனை அதிகரிக்கவும், விளை நில மேம்பாட்டு திட்டத்திற்கு, ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க, கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரி அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது.இத்திட்டத்தின்படி, நிலத்தை மேம்படுத்த ஏரியில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயி, முதலில் வருவாய் துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.மனுவுடன், ஒரு லோடு மண்ணிற்கு ரூ.1000 என கணக்கிட்டு பணம் செலுத்த வேண்டும். அதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயி குறிப்பிட்ட ஏரியில் மண் எடுக்க வேண்டிய பரப்பளவை அளவீடு செய்து கொடுப்பர். அதன்பிறகே, விவசாயி தனது செலவில் மண் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரும் செலவு

அரசின் இந்த புதிய திட்டத்தில், நிலத்தை மேம்படுத்திட விவசாயிகள் பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளது. இதனால், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் ஆர்வமின்றி உள்ளனர்.எனவே, மாநிலத்தில் விளை நிலங்களை மேம்படுத்திட, 100 சதவீத மானியத்துடன் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை வேளாண் துறை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.