நேற்று வரை இருள்.. வேட்பாளரான பின் திரௌபதி முர்மு கிராமத்திற்கு திடீரென கிடைத்த மின்சாரம்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவரது கிராமத்திற்கு முதன்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த கிராமமான உபர்பேடா கிராமத்திற்கு மின்சார வசதியில்லை என்ற செய்தி பரவத் துவங்கியது. பல தசாப்தங்களாக இருளில் வாழும் கிராமவாசிகளின் அவலநிலை பற்றிய புகார்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, ஒடிசா அரசாங்கம் மின்மயமாக்கத் தொடங்கியுள்ளது.
Tribal woman likely to be India's next ceremonial president | National  Government and Political News | journalstar.com
3,500 மக்கள்தொகை கொண்ட குசுமி தொகுதியில் உள்ள உபர்பேடா கிராமத்தில் படாசாஹி மற்றும் துங்குர்சாஹி என்ற இரண்டு குக்கிராமங்கள் உள்ளன. படாசாஹி குக்கிராமம் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்ட நிலையில், துங்குர்சாஹியில் இன்னும் பல வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.
சனிக்கிழமையன்று டாடா பவர் நார்த் ஒடிசா டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (TPNODL) அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 38 மின் கம்பங்கள் மற்றும் 900 மீட்டர் கேபிள்கள், கண்டக்டர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் ஒரு டிரக் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்களுடன் உபர்பேடாவை அடைந்தனர். “மின்மயமாக்கல் பணியை முடிக்கவும், முழு உபர்பேடா கிராமத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும் நிறுவனத்தின் மயூர்பஞ்ச் பிரிவுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.” TPNODL மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முர்மு தனது கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராய்ராங்பூருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து விட்டார். இருப்பினும் திருவிழாக் காலங்களில் கிராமத்திற்குச் சென்றாலும் ஊர்மக்கள் இந்த விஷயத்தை முர்முவின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை என்று TPNODL மூத்த அதிகாரி கூறினார்.
“2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை மக்கள் இன்னமும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளை ஒளிரச் செய்கிறார்கள்” என்று உபர்பேடா கிராமத்தில் வசிக்கும் சித்தரஞ்சன் பாஸ்கே கூறினார்.
குக்கிராமத்தில் உள்ள வீடுகள் வன நிலத்தில் கட்டப்பட்டதால் துங்குர்சாஹிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “கிராம மக்களை இருளில் வைத்திருக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் சில அதிகாரப்பூர்வ அனுமதிகள் இல்லாததால் இது நடந்தது” என்று அந்த அதிகாரி கூறினார்.
குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் தான் திரௌபதி முர்மு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. சொந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை என்பதை அவர் எப்படி கவனிக்காமல் இருந்தார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.