எல்மா,-”பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு, ‘ஜி – 7’ நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, இந்தியாவில் உருவாகி உள்ள மிகப் பெரிய பசுமை எரிசக்தி தொழில்நுட்ப சந்தையில் அனைத்து நாடுகளும் முதலீடு செய்ய வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
புகைப்படம்
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய, ஜி – 7 அமைப்பின் மாநாடு, தெற்கு ஜெர்மனியின் மலைப்பகுதியான எல்மாவில் உள்ள மிகப் பழமையான ஸ்கால்ஸ் எல்மா என்ற நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.இதில் விருந்தினராக பங்கேற்க நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார்.
இந்நிலையில், மாநாடு நடக்கும் ஸ்கால்ஸ் எல்மா நட்சத்திர விடுதிக்கு பிரதமர் நேற்று சென்றார். அவரை ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார். மாநாடு அரங்கில் பிரதமர் மோடியை கண்டதும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நெருங்கி வந்து கைகுலுக்கினார். தலைவர்கள் குழு புகைப்படம் எடுப்பதற்கு முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார். சில நிமிட உரையாடலுக்கு பின் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மோடியைப் போலவே, அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்க தலைவர்களும், ஜி – 7 மாநாட்டில் விருந்தினர்களாக பங்கேற்றனர்.இந்த மாநாட்டில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யவும், ரஷ்யா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிப்பது குறித்தும், ஜி – 7 நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர். நேற்றைய மாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜி – 7 நாடுகளின் தலைவர்களுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கலந்துரையாடினார்.
உத்வேகம்
அப்போது, ரஷ்யாவை எதிர்த்து போரிட, தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி, அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, விருந்தினர்களாக பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் நேற்று உரையாற்றினர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்தில், இந்தியா திட்டமிட்டதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 40 சதவீத இலக்கை அடைந்துள்ளது. பெட்ரோலில், 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை 5 மாதங்கள் முன்னதாகவே அடைந்துள்ளோம். முற்றிலும், சூரிய சக்தியில் இயக்கும் உலகின் முதல் விமான நிலையம் இந்தியாவில் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடு இத்தகைய வளர்ச்சியை காட்டும்போது, இதர வளரும் நாடுகளும் உத்வேகம் பெறுகின்றன. இந்தியாவின் முயற்சிகளுக்கு ஜி – 7 நாடுகள் ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன்.
இந்தியாவில், பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்திற்கான மிகப் பெரிய சந்தை உருவாகி வருகிறது. இதற்கான ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் ஜி – 7 நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்.சுழற்சி பொருளாதாரத்தின் முக்கிய கோட்பாடுகள் இந்திய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.கடந்த ஆண்டு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற இயக்கம் துவங்க அழைப்பு விடுத்தேன்.
முயற்சி
இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் அந்த இயக்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.இதுபோன்ற வாழ்க்கை வாழ்பவர்களை, ‘பூமிக்கு ஆதரவான மக்கள்’ என அழைக்க வேண்டும். இது போன்ற எண்ணம் உடைய மக்களின் எண்ணிக்கையை நம் நாட்டில் அதிகரிக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கு இதுவே நாம் அளிக்கும் மிகப் பெரிய பங்களிப்பாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.