ரஜினி கதாபாத்திரங்களின் மிக முக்கியமான உளவியல் என்பது பணம் குறித்த பார்வை.
ரஜினி என்னும் நடிகனை வெறும் கமர்ஷியல் ஹீரோவாக மட்டும் சுருக்கி பார்க்கும் தன்மை இன்றளவும் இருந்து வருகிறது. ஏராளமான கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர் என்பதால் ரஜினியின் நடிப்பு குறித்து அதிகம் பேசப்படாமலே இருந்து வருகிறது. ஓரளவு பேசப்பட்டாலும் ரஜினி வெளிப்படுத்திய நடிப்பு ஆற்றல் என்பது அதனையெல்லாம் கடந்தது. கமல் என்றால் நடிப்பு, ரஜினி என்றால் ஸ்டைல் என்று பார்க்கும் போக்கு மிகவும் துரதிருஷ்டவசமானது. சில நேரங்களில் இந்த மதிப்பீடானது அவருக்கே சிக்கலாக மாறி, அவரது முழுமையான நடிப்பு ஆற்றலுக்கான வாய்ப்பு உருவாகாமலே போனது. சில படங்கள் அதனாலே தோல்வியையும் சந்தித்தது.
ரஜினி ஆகச் சிறந்த கலைஞன். தமிழ் சினிமாவில் அவரை கிட்டதட்ட முழுமையாக பயன்படுத்தியவர் மகேந்திரன். ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ இரண்டும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தளபதி படத்தில் மணிரத்னம் ரஜினியை நன்றாக பயன்படுத்தி இருப்பார். வணிக ரீதியான அம்சங்களுக்காக படத்தில் சேர்க்கப்படும் அம்சங்களின் அளவு கூடுதலாக செல்லும்போது ரஜினி நடிப்பு ஆற்றலுக்காக அம்சங்கள் குறைந்துவிடுகிறது. அவரது எல்லா படங்களிலும் இந்த முரண்பாடு இருந்து கொண்டே இருக்கும்.
ரஜினியை மக்கள் மனங்களில் ஆழமாக கொண்டு சென்றது, அவரது உணர்வுபூர்வமான நடிப்பு ஆற்றலும், வாழ்க்கை குறித்த தத்துவங்களை தன்னுடைய இயல்பான நடிப்பால் பல இடங்களில் அவர் வெளிப்படுத்திய விதமும்தான். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் இந்த பாணியை அரசியலுக்காக கையாண்டார். போராட்ட குணத்தை தொடர்ச்சியாக தன்னுடைய படங்களில் வெளிப்படுத்திக் கொண்டே வருவார். அதேபோல் ரஜினியின் படங்களில் தொடர்ச்சியாக ஒரு வாழ்க்கை குறித்த தத்துவ கருத்துக்கள் இருந்து கொண்டே இருக்கும்.
ரஜினி கதாபாத்திரத்தின் தத்துவம் – உளவியல் பார்வை
ஏன் ரஜினி படங்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் நெருக்கமாக சென்று சேர்ந்தது என்பது ஆய்வு கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, பட்டி தொட்டியெங்கும் ஏழை எளிய ஜனங்கள் மத்தியில் ரஜினி எங்கும் நிறைந்திருந்தார். தமிழகத்தில் ரஜினி ரசிகர் மன்றங்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம். எப்படி ரஜினி இந்த அளவிற்கு சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவரது வெறும் ஸ்டைல் மட்டும் தான் காரணமா?. நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரஜினி ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக நாம் பார்த்தால் ரஜினியின் கதாபாத்திரங்களுக்கு என்று ஒரு பொதுவான உளவியலும், தத்துவங்களும் உண்டு. அதில் இருந்த பெண்கள் குறித்த பார்வையைத்தான் ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பேச்சில் சொல்லியிருந்தார். அது குறித்து தனியாக பேசலாம்.
ரஜினி கதாபாத்திரங்களின் மிக முக்கியமான உளவியல் என்பது பணம் குறித்த பார்வை. ’மனிதனுக்கு வாழ்க்கையில் பணம் ஒரு போதும் நிம்மதியை தராது’, ‘ பணம் மனிதர்களுக்கு இடையிலான உறவை சிதைத்துவிடும்’,அன்பு தான் உறவுக்கு முக்கியமானது. இதுதான் ரஜினி படங்களில் பெரும்பாலும் அவரது கதாபாத்திரங்களின் தன்மையாக இருக்கும். அதில் முத்தாய்ப்பாய் வந்த படம்தான் ‘படிக்காதவன்’. இதில் திருந்தி வந்த தம்பியிடம் ரஜினி பேசும் காட்சி மிகவும் க்ளாசிக்கானது. படிச்சு படிச்சு சொன்னனே வாழ்க்கையில் பணம் முக்கியமில்லை என்று ரஜினி சொல்லும் அந்த வார்த்தைகள் ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் தேவையான படிப்பினை.
மிஸ்டர் பாரத், வேலைக்காரன் படங்களில் இந்த அம்சம் இருந்தாலும் பணக்காரன் படத்தில் வெளிப்படையாகவே நிறைய இடங்களில் பேசி இருப்பார். அதனை தர்மதுரை படம்தான் இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தியது. வெகுளியாக இருந்த ரஜினிகாந்த் தம்பிகள் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த பின் அவரது கதாபாத்திரமே வேறு மாதிரியாக இருக்கும். வெள்ளை தாடியுடன் முதிர்ச்சியான வேடத்தில் எல்லோர் நெஞ்சகளிலும் நிறைந்திருப்பார். ’அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன என்னடி எனக்கு வேலை’ என்ற பாடல் அவ்வளவு நேர்த்தியாக வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லியிருக்கும்.
தர்மதுரை வெளியான அடுத்த வருடமே வெளியான படம் தான் அண்ணாமலை. பணத்தின் பொருட்டு தன்னுடைய நண்பனால் துரோகத்தை சந்தித்த பிறகு ரஜினியின் கேரக்டர் அப்படியே மாறிவிடும். அந்தப் படத்தின் மிக முக்கியமான அழுத்தமான காட்சி காதல் விஷயத்தில் மகளுடனான உரையாடலும் அதன் பிறகு வரும் ஒரு வெண்புறா பாடலும் தான். அந்தப் பாடலில் வரும் ‘கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணச் சொக்குமே அது அந்தக் காலமே… மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே’. அந்தப் படத்தின் இறுதியில் மீண்டும் எளிமையான வாழ்க்கையை நோக்கிதான் அவர் வருவார்.
இந்த வரிசையில் மாப்பிள்ளை படமும் முக்கியமானது. அந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவுக்கும் ரஜினிக்கும் இடையிலான காட்சிகள் ஒவ்வொன்றிலும் பணம் குறித்தான அந்த பார்வையை அழுத்தமாக சொல்லி இருப்பார் ரஜினி. முத்து, அருணாசலம் போன்ற படங்களிலும் பணம் குறித்த பார்வையை பதிவு செய்திருப்பார். அதாவது, பணம் அல்ல உறவு தான் முக்கியம்.. இதுதான் ரஜினி கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த தத்துவம். மக்கள் மத்தியில் ஏற்கெனவே பணம் குறித்து இருக்கும் வெறுப்பும், பணத்தால் உறவுகள் நாள்தோறும் சீர்கெட்டு போவதையும் ரஜினி தன்னுடைய இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தியது அவரை மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமாக கொண்டு சென்றது.
வயதின் முதிர்ச்சியும், நடிப்பின் முதிர்ச்சியும்
மேற்சொன்ன விஷயங்களை நாம் புரிந்து கொள்வதற்கு ரஜினி திரையுலகில் கடந்து வந்த பாதையை நாம் கவனிக்க வேண்டும். நடிப்பில் குறிப்பிட்ட காலத்தில் அவர் முதிர்ச்சியை எட்டிய பிறகுதான் வாழ்க்கை குறித்து அவர் பேசிய தத்துவங்களின் நம்பகத்தன்மை அதிகமானது. 1975 ஆம் ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தப் போது அவருக்கு வயது 25. இரண்டு வருடங்களில் 1977ல் வெளிவந்த பைரவியில் தான் ஹீரோவாக நடித்தார். பைரவா ஹீரோவாக முதல் படம் என்றால் முத்திரை பதிக்கும் அளவிற்கு ஹீரோவாக அவரை எல்லோரும் ஏற்றுக் கொண்டது முள்ளும் மலரும் படத்தில் தான். திரையுலகில் அடி எடுத்து வைத்த பத்தே வருடங்களில் ரஜினி 100 படங்களில் நடித்துவிட்டார். ராகவேந்திர அவரது 100வது திரைப்படம். இந்தப் படம் 1985ம் ஆண்டில் வெளி வந்தது. எந்தவொரு நடிகரும் கிட்டதட்ட நூறு படங்கள் நடித்தப் பின் நிச்சயம் நடிப்பில் ஒரு முதிர்ச்சியை அடைந்திருப்பார்கள்.
ரஜினியின் கேரியரில் அவரது நடிப்பில் அப்படியான முதிர்ச்சியை வெளிப்படுத்த தொடங்கியது நல்லவனுக்கு நல்லவன் படத்தில் இருந்துதான். அதற்கு முன்பு வெளிவந்த நான் மகான் அல்ல, ரங்கா, தங்க மகன், தர்ம யுத்தம், பில்லா, அன்புக்கு நான் அடிமை, பொல்லாதவன், தில்லு முல்லு படங்களில் இருந்து நான் சிகப்பு மனிதன், படிக்காதவன், நான் அடிமை இல்லை, வேலைக்காரன், ஊர்க்காவலன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்ற படங்கள் இருந்தே ரஜினி வேறாக இருந்தார். அவரது அனுபவத்தின் முதிர்ச்சி எல்லா கதாபாத்திரங்களிலும் வெளிப்பட்டது.
ஒரு கதாபாத்திரம் பக்குவத்தின் பொருட்டு வசனங்களை வெளிக்கொணரும் போதும் மக்களிடையே அது நெருக்கமாக செல்லும். நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கு பிறகு பெரும்பாலான படங்களின் ரஜினியின் நடிப்பு திறன் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வந்திருக்கும். தந்தையாக, அண்ணனாக, நண்பனாக அவர் உணர்வு பொங்க பேசும் காட்சிகள் உண்மையில் நம்மை மெய்சிலிரிக்க வைக்கும். அந்த முதிர்ச்சிக்கு பிறகுதான் ரஜினி சொல்லும் வார்த்தைகளுக்கு அர்த்தம் கூடியது.
இதையும் படிக்கலாமே: அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai