முனிச்: பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, உக்ரைன் விவகாரம் குறித்து ஜி7 தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மிட்டன்வால்ட் நகர் அருகே அமைந்துள்ள ஸ்லாஸ் எல்மவ் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் ஜி7 மாநாடு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றார். முதல் நாளில் இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, ஜி7 மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்ற பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, சுகாதாரம் தொடர்பான அமர்வில் அவர் கலந்து கொண்டார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடந்த உணவுப் பாதுகாப்பு, பாலின சமநிலை குறித்த அமர்விலும் அவர் பங்கேற்றார்.
இந்த அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
உலகின் மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். எனினும் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. வளரும் நாடுகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையை பேணிப் பாதுகாத்து வருகிறோம்.
இந்த பசுமை முயற்சி தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் அனைத்து வீடுகளுக்கும் சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்க எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் முதல் சூரிய சக்தி விமான நிலையம் இந்தியாவில் உள்ளது. பருவநிலை மாறுபாட்டை தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியா முன்னோடியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தலைவர்களுடன் சந்திப்பு
இந்த மாநாட்டின்போது ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் அரை மணி நேரம் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் விவகாரம், இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 நாடுகளின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின்போது உக்ரைன் விவகாரம், பருவநிலை மாறுபாடு, எரிசக்தி குறித்து பிரதமர் மோடி ஆலோசித்தார்.
ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்கி காணொலி வாயிலாக பங்கேற்றார். உக்ரைனுக்கு தாமதமின்றி ஆயுதங்களை வழங்க வேண்டும். ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அதிபர் ஜெலன்கி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை
உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கி வருகின்றன. எனினும், நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை இதுவரை வழங்கவில்லை. போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் வேண்டுகோளை ஏற்று நீண்ட தொலைவு பாயும் அதிநவீன ஏவுகணைகளை அந்த நாட்டுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜி7 மாநாடு நடைபெறும் நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவை தனிமைப்படுத்துவதில் நேட்டோ மற்றும் ஜி7 நாடுகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை ஜி7 நாடுகளின் தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ரஷ்யாவுக்கு எதிராக உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என்று தெரிவித்தார்.
அமீரக அதிபருடன் சந்திப்பு
ஜெர்மனியில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் இரங்கல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மோடியை தேடி வந்த பைடன்
ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்புக்கு தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லை. எனினும் மாநாட்டின்போது இரு தலைவர்களும் சிறிது நேரம் ஆழ்ந்த நட்புடன் பேசினர்.
ஜி7 நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள் இணைந்து புகைப்படம் எடுத்தபோது பிரதமர் மோடிக்கு அருகில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நின்றிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சற்று தள்ளி நின்றிருந்தார். அப்போது, அதிபர் பைடன் பிரதமர் மோடியை தேடிச் சென்றார். பின்னால் இருந்து அவர் பிரதமர் மோடியை தொட்டார். ஆச்சரியத்தில் திளைத்த மோடி, பைடனுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதேபோல, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடியும் ஆரத் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் இணைந்து தேநீர் அருந்தினர்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ தெராவி ஆகியோருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.