லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காகவும் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் வாரணாசி சென்றார். வாரணாசியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்கு புறப்பட்டார்.
புறப்பட்ட சிறிது நேரத்திலே அவரது ஹெலிகாப்டர் மீது பறவை ஒன்று மோதியது. இதனால், ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு உடனடியாக அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இத்தகவலை வாரணாசி மாவட்ட ஆட்சித் தலைவர் கவுசல்ராஜ் சர்மா தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் தரையிறக்கப் பட்டதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் காரில் வாரணாசி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் லக்னோ சென்றார். முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதிய சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.