இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றார். சுமார் 65 தலைமை கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவிக்கையில், “வருகின்ற ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் போட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் முடிவுகள் செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை நிர்வாகிகள் பொறுப்பேற்று கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர்.
நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர்.
எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். ஓபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆட்சியை பாராட்டி இருப்பதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்று தான் சொல்வேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார்.
பல விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து இப்போது செய்தியாளர்களுக்கு சொல்ல முடியாது. இன்று பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.