பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிக்க இம்ரான் கானே காரணம்: ஷெபாஸ் ஷெரீப் விமர்சனம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்குப் பின்னால், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், “கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்கு இம்ரான் கான்தான் காரணம். பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். பாகிஸ்தானின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கான பணிகளுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ பள்ளியில் நடந்த தாக்குதலில் 149 பேர் பலியாகினர். பலியானவர்களில் 132 பேர் பள்ளி மாணவர்கள். பாகிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்களில் 388 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் பாகிஸ்தான் பிரதமராக கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார்.

பாகிஸ்தானில் கரோனாவுக்கு பிறகு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. தேயிலை உள்ளிட்ட பல முக்கியப் பொருட்களை அந்நாடு இறக்குமதி செய்து வருகிறது. பொருளாதார தேக்க நிலையை சமாளிக்க ஷெபாஸ் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.