புதுடெல்லி: ‘‘நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு பிராந்திய எல்லைகளில் சீனா, பாகிஸ்தானால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், தேவைப்படும்போது குறுகிய நேரத்தில் சரியான பதிலடிகொடுக்க இந்திய விமானப் படையால் முடியும்’’ என்று விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி உறுதியாக தெரிவித்தார்.
இந்திய விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நமது நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் சில சவால்கள் உள்ளன. எல்லை வரையறை இல்லாததால் இந்த சவால்கள் நீடிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடம் இருந்து இரு முனை அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கு ஏற்ற வகையில் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டிது அவசியம். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், இந்திய விமானப் படையால் குறுகிய நேரத்தில் சரியான நேரத்தில் பதிலடி கொடுக்க முடியும்.
ராணுவ வீரர்கள் குவிப்பு, கட்டமைப்புகளை அதிகரித்தல், தகவல்களை கையாளுதல் உட்பட அனைத்து நிலைகளிலும்இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படலாம். எதிர்காலத்தில் இந்தியபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அனைத்து வகையான நடவடிக்கைகளும் ஏற்படலாம். எனவே, அனைத்து வகையான வாய்ப்புகளையும் கருதியேதயார் நிலையில் விமானப் படை உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பது, இந்தியாவின் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுகோட்டருகே (எல்ஏசி) சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்காதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், எல்லைப் பிரச்சினையைப் பொறுத்தவரைஇந்தியா தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. ஒரு நாடு என்ற வகையில் நமது பாதுகாப்புக்கு உடனடியாக உள்ளஅச்சுறுத்தல் மற்றும் எதிர்கால அச்சுறுத்தலை இனம் காண வேண்டியது அவசியம். அப்படி இனம் கண்டுவிட்டால் தேவையான திறன்களை நாம் மேம்படுத்திக் கொண்டு பதிலடி கொடுக்க முடியும்.
லடாக்கின் எல்ஏசி பகுதியில் சீனா படைகளை குவித்தாலும், இந்திய விமானப் படையால் உடனடியாக பதிலடி கொடுக்க முடியும். இந்திய ராணுவ நடவடிக்கை தொடர்பான திட்டங்கள், திறமை, தொழில்நுட்ப மேம்பாடு, தீவிர பயிற்சி போன்றவற்றால் பாகிஸ்தான், சீனா ஆகிய இருதரப்பு அச்சுறுத்தல்களையும் ஒருசேர சமாளிக்க முடியும். குறுகிய காலத்தில் எல்லைகளில் படைகளை குவிப்பது, துரிதமாக திட்டம் வகுத்தல், செயலில் இறங்குதல் போன்றவற்றின் மூலம் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும். எது நடந்தாலும் தேசியஇறையாண்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எல்லையில் அத்துமீறல் நடந்த போதெல்லாம் நமது ராணுவப் படை தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நமது பாதுகாப்புப் படையின் உள்கட்டமைப்புகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக சினூக் ரக ஹெலிகாப்டர்கள், ரஃபேல் போர் விமானங்கள் போன்றவை ஏற்கெனவே விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளன. அவை எல்லைகளில் எப்போதும் தயார் நிலையில் உள்ளன.
இதுபோல் அதிநவீன விமானங்கள் மூலம் மேற்கு மற்றும் வடக்கு பகுதி எல்லைகளில் எந்தஅத்துமீறலுக்கும் பதிலடி கொடுக்கமுடியும். எல்லைகளில் எந்தளவுக்குப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரம் தெரிவிக்க இயலாது. ஆனால், விமானப் படையால் குறுகிய நேரத்தில் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பதை உறுதியாக கூற முடியும்.
இவ்வாறு வி.ஆர்.சவுத்ரி கூறினார். -பிடிஐ