மதுரை: பிட்காயின் பெயரில் 484 பேரிடம் ரூ.2.47 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுரை ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்தவர் அனுராதா. இவர் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது: ” நான் மதுரையில் தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். பகுதி நேரமாக அருகில் மசாலா பொடி தயாரித்து விற்றேன். எனது மசாலா தயாரிப்பு குறித்து சமூக வலைத்தளத்திலும் தகவல் பதிவிட்டு இருந்தேன். என்னுடைய பொருட்களை விற்க சில வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டபோது, ஐஸ்வர்யா என்ற பெண் அறிமுகம் ஆனார். பின்னர் இருவரும் தகவல்களை பகிர்ந்தோம்.
சில வாரத்திற்கு பின், ஐஸ்வர்யா , என்னிடம் பிட்காயின் கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி முதலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தேன். மாதந்தோறும் ரூ.15,435 என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், 6 மாதம் மட்டும் தொகை வழங்கப்பட்டது. இதன்பின், பணம் தரவில்லை. இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, கிரிப்டோ நிறுவனம் வருமான வரி பிரச்சினையில் சிக்கியதால் பிறகு தரப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையில், அவர் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இருதயராஜ், அவரது மனைவி தவரஞ்சனி மற்றும் சாய்தனி, சாய் ஜனனி ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அவர்கள் தங்களிடம் ரூ.33 கோடி மதிப்புள்ள பிட்காயின்ஸ் இருப்பதாகவும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பங்குதாரராக சேர்ந்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியதால் சில லட்சம் முதலீடு செய்தேன். சங்கிலி தொடர் தொழில் என்பதால் எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என, சுமார் 484 உறுப்பினர்களை சேர்த்து முதலீடு செய்ய வைத்தேன்.
இந்நிலையில் இருதயராஜை திடீரென தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது மொபைல் எண்ணை அவர் தடை செய்து விட்டார். பல்வேறு முயற்சிக்கு பின்னர் கூகுள் வாயிலாக சாய்தனி, சாய் ஜனனியை தொடர்பு கொண்டபோது, எங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. எங்களால் பணம் தர இயலாது, நீங்கள் சேர்த்துவிட்ட உறுப்பினர்களை சமாளித்துக் கொள்ளுங்கள், இதையும் மீறி எங்களிடம் பேச முயன்றால் கொலை செய்து விடுவோம் என, தெரிவித்து இணைப்பை துண்டித்துவிட்டனர்.
எனக்கும், நான் சேர்த்துவிட்ட உறுப்பினர்களுக்கும் இருதயராஜ், தவரஞ்சனி, சாய் தனி, சாய் ஜனனி ஆகியோர் ரூ. 2, கோடியே 75 லட்சத்து 18, ஆயிரத்து 905 தர வேண்டும். இத்தொகையை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அனுராதா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.