புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “முழுமையாக திசைதிருப்பும் அறிவியலில் திறமை வாய்ந்தவர் பிரதமர் மோடி. ஆனால் அவரது அந்தத் திறமையால், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.33 லட்சம் கோடி சரிவு, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு, முன் எப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரிப்பு, டிஎச்எப்எல் நிறுவனத்தின் வங்கி முறைகேடு உள்ளிட்ட பேரிடர்களை மறைக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து போராடி வரும் நிலையில், இதையெல்லாம் திசை திருப்புவதற்கான அடுத்த திட்டத்தை பிரதமர் மோடி தீட்டி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.