புதுடெல்லி: ஜெர்மனியில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க முனிச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர், ‘‘இந்தியாவின் அனைத்து கிராமங்களும் திறந்வெளி கழிப்பிடம் இல்லாதவைகளாகவும், மின்சார வசதி பெற்ற கிராமங்களாகவும் மாறியுள்ளன’’ என்றார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் நேற்று அளித்த பதிலில், ‘அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறும் வேளையில், பாஜவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கிராமத்துக்கு போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றது. இது மட்டும் மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை. இந்தியாவின் பல தொலைதூர பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கப்பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை. 2014ம் ஆண்டு வரையிலான முந்தைய அரசுகளின் சாதனைகளை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். முந்தைய அரசுகளின் பணியை தான் தற்போதைய அரசு தொடர்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.