புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அக்னிபத் திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் ராணுவ வீரர்களை உருவாக்க முடியாது. அந்த திட்டத்தில் 6 மாதம் பயிற்சி பெற்றவர்களை 3½ ஆண்டுகள் பணிபுரிய வைத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்கிறார்கள். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அந்த திட்டத்தை எதிர்த்து புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போராட்டம் நடத்த வேண்டும் என்று சோனியா காந்தி கட்டளையிட்டிருக்கிறார். அதன்படி அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும். இரண்டு நாள்களுக்கு முன்பு கவர்னர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது கவர்னருக்கு நில உரிமை அதிகாரத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூட அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மாநிலம். முதல்வரையும், அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்த கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. முதல்வர்தான் அந்த கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். நிலம் தொடர்பான பிரச்னைகளில் முடிவெடுக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு.
பட்டா மாற்றும் அதிகாரம், நிலத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம், உபரி நிலத்தை நில உரிமையாளரிடம் பெற்று ஏழைகளுக்கு கொடுக்கும் அதிகாரம், பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பவருக்கு அந்த சொத்தை அவருக்கு உரிமை படுத்தி கொடுக்கும் அதிகாரம் என புதுச்சேரியில் 4 சட்டங்கள் அமலில் இருக்கின்றன. புதுச்சேரியில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த தகவல்படி பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக கவர்னருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்துறை சொத்துகளை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது.
முதல்வர் தனது அதிகாரத்தை கவர்னரிடம் விட்டு கொடுத்துவிட்டார். கவர்னர் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருப்பதாக நான் கூறியது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனை எதிர்த்து போராடுவோம். புதுச்சேரி மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத்தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். கடந்த ஒரு வருடத்தில் 35 மத்திய அமைச்சர்கள் புதுவைக்கு வந்துள்ளார்கள். அவர்களால் புதுவைக்கு ஒரு பைசா கொண்டுவர முடிந்ததா ? குடுகுடுப்புக்காரனை போல் புதுச்சேரிக்கு நல்ல காலம் பிறப்பதாக கவர்னர் கூறி வருகிறார்.
அந்த நல்ல காலம் எங்கே வருகிறது? நான் முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 10% நிதியை பெற்றேன். ஆனால், ரங்கசாமியால் வெறும் 1.56% நிதியைத்தான் கூடுதலாக பெற முடிந்தது. இந்த அரசு செயல்படாத அரசாக உள்ளது. மக்களை பற்றி கவலைப்படவில்லை. வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பேசப்படுகிறது. முதல்வர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. சாலைகள் மோசமாக உள்ளது. தெருவிளக்குகள் எரிவதில்லை. நகரம் சுத்தமாக இல்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா சரளமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் புதுச்சேரி பின்நோக்கி சென்றுவிடும்.
மத்திய அரசு புதுச்சேரிக்கு ஏன் நிரந்தர கவர்னரை போடவில்லை? தமிழிசை தெலங்கானாவுக்கு கவர்னராக இல்லாமல் புதுச்சேரியிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். தெலங்கானாவில் இவருக்கு வேலையில்லையா? டெல்லிக்கு சென்ற கவர்னர் புதுச்சேரிக்காக என்ன திட்டத்தை கொண்டுவந்தார்? ஜிப்மர் சரித்திரத்திலேயே பேராசிரியர்கள் தெருவில் இறங்கி போராடியதை இப்போதுதான் பார்க்கிறோம். பெயர் பெற்ற ஜிப்மரை சீரழித்துவிட்டார்கள். ஜிப்மரை கவனிக்காத மத்திய அரசால் புதுச்சேரியில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும்? முன்னாள் கவர்னர் கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது. இந்த அரசு லஞ்சத்தில் ஊறிய அரசு. மதுக்கடைகள் விவகாரத்தில் லஞ்சம் பெறப்படவில்லை என்று முதல்வரை கூற சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.