நியூயார்க்: அமெரிக்க கருக்கலைப்பு எதிர்ப்பு திட்டத்திற்கு அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் வலுப் பெற்று வருகின்றன.
இந்த சூழலில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல மாகாணங்களில் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 1973-ம் ஆண்டு ரோ வெர்சஸ் வேட் வழக்கில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தத்தின்படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது என்பன உட்பட பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், மிசிசிபி மாகாண அரசு 2018-ல் கருக்கலைப்புக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதன்படி 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய முடியாது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், மாகாண அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மிசிசிபி மாகாண அரசின் சட்டம் ரோ வெர்சஸ் வேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மிசிசிபி மாகாண அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் 8 மாகாணங்களில் கருக்கலைப்பு தடை சட்டம் அமெரிக்காவில் உடனடியாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அமெரிக்காவில் பெண்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இதில் பீனிக்ஸ், அரிசோனா போன்ற மாகாணங்களில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
19 வயதான மாணவி ஒருவர்பேசும் போது,“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிச்சயம் ஏற்று கொள்ள கூடியது அல்ல. பெண்களை தாயாக கட்டாயப்படுத்துவது ஏற்புடையது அல்ல.இது பெண்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்” என்றார்.
57 வயதான பெண்மணி பேசும்போது, “ அவர்கள் எல்பிஜிபிடியை எதிர்த்தார்கள். தற்போது பெண்களிடம் வந்துள்ளார்கள். இவை நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முடிவு இறுதி அல்ல என்றும் மகாணங்களிலும் , மத்தியிலும் கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருக்கிறார்.