மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் அதிருப்தி கோஷ்டி தலைதூக்கி இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த கோஷ்டியில் 40 சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் உட்பட 50 பேர் இருக்கின்றனர். அவர்கள் அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் தங்கியிருக்கின்றனர். அவர்களில் 16 பேருக்கு ஏன் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியைப் பறிக்கக்கூடாது என்று கேட்டு துணைச் சபாநாயகர் நர்ஹரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவர்கள் இன்று மாலைக்குள் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து 16 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, “ஏன் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவில்லை?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் வழக்கறிஞர் என்.கே.கவுல், “அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே அங்கு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யத் தகுந்த சூழ்நிலை இல்லை” என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவுத் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் உடல்தான் மும்பை வரும் என்று மிரட்டியதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிவசேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி, “எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் முடிவு எடுக்க துணை சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது, அதில் கோர்ட் தலையிடவேண்டும் என்று கேட்கமுடியாது” என்று வாதிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் துணை சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றும், அது தொடர்பான கடிதம் மர்ம அஞ்சல் ஒன்றிலிருந்து வந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அபிஷேக் வாதிட்டார்.
இதற்குக் கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், “துணைச் சபாநாயகர் தன்மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை ரத்து செய்வதாக அறிவிக்கிறார். துணைச் சபாநாயகர் தனது கோர்ட்டில் தானே நீதிபதியாக இருக்க முடியுமா? அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களின் சொத்துக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது. அவர்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். வரும் ஜூலை 11-ம் தேதிவரை எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என்று உத்தரவிட்டார். மேலும், துணைச் சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அன்றைய தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார்.