புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிவசேனாவின் 38 எம்எல்ஏக்கள் விலக்கிக் கொண்டுள்ளதால் அந்த அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலர் ஆதரவுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதன்படி, ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களுக்கு துணை சபாநாயகர் நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஷிண்டே தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மகாராஷ்டிர மாநில மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. சிவசேனா கட்சியை சேர்ந்த 38 எம்.எல்.ஏக்கள் ஆதரவை திரும்ப்பெற்று இருப்பதால், சட்டப்பேரவையில் மகாராஷ்டிர அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அதுபோலவே சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக அஜய் சவுத்ரி நியமனமும் செல்லாது. சிவசேனாவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.