குஜராத் கல்லூரியொன்றில், பா.ஜ.க கமிட்டியில் சேருமாறு மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பாவ்நகரில் உள்ள காந்தி பெண்கள் கலை மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தனியார் ஊடகமொன்றில் வெளியான அந்தக் கல்லூரியின் முதல்வர் அனுப்பியதாகக் கூறப்படும் நோட்டீஸில், “கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும், பா.ஜ.க கமிட்டியில் உறுப்பினராகப் பதிவு செய்ய தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை கொண்டுவரவேண்டும்.
மேலும், இதில் பாவ்நகர் முனிசிபல் கார்ப்பரேஷனுக்குள் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க-வில் உறுப்பினராக சேர ஒவ்வொரு மாணவரும் செல்போனும் கொண்டுவரவேண்டும். அனைத்து மாணவிகளும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கல்லூரி முதல்வரின் இத்தகைய சர்ச்சைக்குறிய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ், உடனடியாக இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.