சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது. இதில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல், ஆன்லைன் ரம்மிதடைக்கான அவசரச் சட்டம் கொண்டுவருதல், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்த பலர்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசுஉடனடியாக தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஆன்லைன் ரம்மிவிளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு விரைவில் தனது அறிக்கையை அளிக்கும் என்றும் அதனடிப்படையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதுதவிர, சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் உலக செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளது. விளையாட்டுப் போட்டிகள், தொடக்கம் மற்றும் நிறைவுவிழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மேலும், தமிழகத்தில் புதியதொழில் முதலீடுகள் பலவற்றுக்குஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல முதலீடுகளுக்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. முதல்வர் விரைவில் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இதில், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கும், புதிய முதலீடுகளை வரவேற்பதற்கும் ஒப்புதல் அளிப்பது, விரைவில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைநடத்தி அதன்மூலம் அதிக முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
அத்துடன், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம், செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.