பெங்களூரு : கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி நடத்தப்படவில்லை. இம்முறை சுதந்திர தினத்தையொட்டி, லால்பாக் பூங்காவில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்ய, கர்நாடக தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.ஆண்டு தோறும் குடியரசு தினம், சுதந்திர தினத்தில், பெங்களூரின் லால்பாக் பூங்காவில், தோட்டக்கலைத்துறை சார்பில், மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்வது வழக்கம்.
இதை காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவர். பூங்காவுக்கும் கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கும். ஆனால் கொரோனா தொற்று பரவியதால், இரண்டு ஆண்டாக மலர்க்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.தற்போது தொற்று குறைந்துள்ளதாலும், அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றதாலும், இம்முறை சுதந்திர தினத்தையொட்டி, பெரிய அளவில் மலர்க்கண்காட்சி நடத்த தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மைசூரு பூங்கா கலா சங்கம் ஒருங்கிணைப்பில், சுதந்திர தினத்தையொட்டி, லால்பாக் பூங்காவில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. கொரோனா கட்டுக்குள் வந்து, மக்களின் வாழ்க்கை, வர்த்தக நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பியதால்,
கண்காட்சிக்கு வரவேற்பு கிடைக்கும்.மலர்க்கண்காட்சிக்கான முன்னேற்பாடுகளை துவங்கியுள்ளோம். பலவிதமான பூக்கள், அலங்கார செடிகள் வளர்க்கப்படுகிறது. பூங்காவில் அபாய நிலையிலிருந்த மரக்கிளைகள் வெட்டப்படுகிறது. தொட்டிகளில் காய்கறிகள் விளைவிப்பது உட்பட, பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.மலர்க்கண்காட்சியில் மறைந்த நடிகர்கள் ராஜ்குமார், புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை குறித்து விவரிக்கப்படும். இவ்விரு நடிகர்களின் உருவங்களை பூக்களால் உருவாக்க, ஆலோசிக்கப்படும்.
கொரோனாவால் தொடர்ந்து, நான்கு முறை மலர்க்கண்காட்சி நிறுத்தப்பட்டதால், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. இம்முறை கண்காட்சியில் நுழைவு கட்டணம் உயர்த்தப்படும். இதற்கு முன் ஒருவருக்கு 70 ரூபாயாக இருந்த, டிக்கெட் கட்டணம் 80 ரூபாயாகவும்; வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 100 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement