டெல்லி: விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், பாஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பிரிவை சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறங்குகிறார். பாஜ வேட்பாளர் முர்மு, கடந்த 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று பகல் 12.05 மணிக்கு பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் யஷ்வந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஜெயராம் ரமேஷ், ேக.சி.வேணுகோபால், திமுக சார்பில் திருச்சி சிவா, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, கோவை செழியன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய யஷ்வந்த் சின்ஹா; மிகவும் முக்கியம் வாய்ந்த பதவிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி. குடியரசுத் தலைவர் பொறுப்பை கையாள்வதில் மெத்தனம் கூடாது. எதிர்கட்சிகளின் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னரே ஆளுங்கட்சி தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம். புதிய கட்டடம் கட்டுவதால் மட்டும் நாடாளுமன்றத்தின் கண்ணியம், மகத்துவத்தை உயர்த்த முடியாது. விதிகள் மதிக்கப்படும்போது நாடாளுமன்றத்தின் கண்ணியம் அதிகரிக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதே மத்தியில் ஆளும் அரசின் நோக்கம். அனைத்து விவகாரங்களிலும் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி விட்டனர். குடியரசு தலைவர் பதவியை மோடி அரசு ரப்பர் ஸ்டாம்ப் போல் பயன்படுத்துகிறது. பழங்குடியின பெண்ணை வேட்பாளராக்கிய பாஜக இதுவரை அந்த மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.