1 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த 'டாப்கன் மேவ்ரிக்'
ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான டாம் க்ரூஸ் நடித்து கடந்த மாதக் கடைசியில் வெளிவந்த ஹாலிவுட் படம் 'டாப்கன் மேவ்ரிக்'. சுமார் 170 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் தயாரான இந்தப் படம் தற்போது ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் வசூலை உலகம் முழுவதும் பெற்றுள்ளது. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் தாக்கத்திற்குப் பிறகு இந்த வருடத்தில் ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்ற முதல் ஹாலிவுட் படம் இது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. டாம் க்ரூஸ் நடிப்பில் முதன் முறையாக ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த படமும் இதுதான்.
இதற்கு முன்பு டாம் க்ரூஸ் நடிப்பில் 2018ல் வெளிவந்த 'மிஷன் இம்பாசிபிள் பால் அவுட்' படம் 791 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்ததுதான் டாமின் அதிக வசூலைப் பெற்ற படமாக இருந்தது. அந்தப் படத்தின் சாதனையை தற்போது 'டாப் கன் மேவ்ரிக்' முறியடித்துள்ளது.
அமெரிக்காவில் 520 மில்லியனும், உலக அளவில் 480 மில்லியன் வசூலையும் இந்தப் படம் இதுவரையிலும் பெற்றுள்ளது. இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.