சென்னை: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியானது. இதில், மாணவர்கள் 84.86 சதவீதம், மாணவிகள் 94.99 சதவீதம் என மொத்தம், 90.07 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி தொடங்கி, மே 31-ம் தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வை 4 லட்சத்து 33 ஆயிரத்து 319 மாணவிகள், 4 லட்சத்து 10 ஆயிரத்து 355 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் உட்பட, மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணாக்கர் எழுதினர்.
தேர்வெழுதிய 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணாக்கரில், 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.07 சதவீதம். 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 94.99 சதவீத மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதே போல், 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 84.86 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு தேர்வெழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசுப் பள்ளிகள் 83.27 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகள் 91.65 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.35 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 90.44 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.90 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 78.48 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளன.