மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் சிண்டே தலைமையிலான 16 சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11 வரை தகுதி நீக்கம் செய்யத் தடை விதித்துள்ளது.
ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேருக்குத் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் நரஹரி சிர்வால், திங்கள் மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 16 பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்றத்தை ஏன் அணுகவில்லை என வினவினர். அதற்கு சிண்டே சார்பிலான வழக்கறிஞர், மும்பையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், சட்டப்படியான தீர்வுகளைப் பெறும் சூழல் இல்லை என்றும் பதிலளித்தார்.
துணைசபாநாயகரை நீக்கக் கோரிய தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என வாதிட்டார். மனுதாரர்களின் வீடுகள் தாக்கப்படுவதாகவும், அவர்கள் மும்பைக்கு வந்தால் வெட்டிக் கொல்லப்படுவார்கள் என மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, அவசரம் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனப் பேரவைத் துணை சபாநாயகருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தகுதி நீக்க நோட்டீசுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்கும் காலக்கெடுவை ஜூலை 11ஆம் நாள் மாலை ஐந்தரை மணி வரை நீட்டித்தும், அதுவரை தகுதி நீக்கம் செய்யத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
ஐந்து நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யப் பேரவைத் துணை சபாநாயகர், செயலர் ஆகியோருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை 11ஆம் நாளுக்குத் தள்ளி வைத்தனர்.