பெங்களூரு: 2 மாத குழந்தையை கொன்ற வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என கூறி தாயை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
2 மாத பெண் குழந்தை
ஆந்திர மாநிலம் அனந்தபுரா மாவட்டம் மடகஷிரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 2 மாத பெண் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தது முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தைக்கு துமகூரு மாவட்டம் கொரட்டகெரே டவுனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து தம்பதி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் குழந்தையை சிகிச்சைக்காக மஞ்சுநாத்-கவிதா கொரட்டகெரேக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் கவிதா திடீரென மாயமானார். பின்னர் கொரட்டகெரே பஸ் நிலையத்தில் கவிதா மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் குழந்தையை பற்றி மஞ்சுநாத் கேட்ட போது குழந்தை ஆற்றில் தவறி விழுந்து விட்டதாக கூறினார். இதையடுத்து மஞ்சுநாத், கொரட்டகெரே டவுன் போலீசார் சேர்ந்து குழந்தையை தேடினர்.
ஆற்றில் மூழ்கடித்து கொலை
அப்போது அப்பகுதியில் ஓடும் சுவர்ணமுகி ஆற்றில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு இருந்தது. பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையை ஆற்றில் மூழ்கி கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குழந்தையை கவிதா ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் அவரை கொரட்டகெரே போலீசார் கைது செய்து இருந்தனர். மேலும் அவர் மீது துமகூரு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கவிதாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தாய் விடுதலை
இந்த நிலையில் துமகூரு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கவிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சோமசேகர் முன்னிலையில் நடந்து வந்தது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சோமசேகர் தீா்ப்பு கூறினார்.
அப்போது கவிதா குழந்தையை கொலை செய்தார் என்பதற்கு உரிய ஆதாரத்தை போலீசார் சமர்பிக்கவில்லை. சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்டனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர், பிரேத பரிசோதனை செய்த டாக்டரின் தகவல்களும் வேறாக உள்ளது. இதனால் இந்த வழக்கில் இருந்து மனுதாரரை விடுவிப்பதாக கூறி நீதிபதி உத்தரவிட்டார்.